இறுதி யுத்தத்தில் தந்தையை தொலைத்து சிறு வயதிலிருந்து ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இரவிச்சந்திரன் யாழினி, வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில்முதலிடம் பெற்று சாதித்துள்ளார்.
நேற்றிரவு (27.12.19) வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் அ பகுதியை சேர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவிச்சந்திரன் யாழினி வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையை தொலைத்து காணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையை தேடிக்கொண்டிருக்கும் இந்த மாணவி ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் நிலையில் வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வணிகத்துறையில் மாவட்ட ரீதியில் முதலாமிடம் பெற்று சாதித்துள்ளார்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் சாதனை
வெளியாகியுள்ள கா.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் இருவர் மாவட்டத்தில் முதல் நிலையினைப் பெற்றுள்ளனர்.
அத்துடன் வெளியாகியுள்ள கா.பொ.த.உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புனித மிக்கேல் கல்லூரி பெருமளவான வெளியீடுகளைக் பெற்று முதல் இடம் வகிக்கின்றது.
புனித மிக்கேல் கல்லூரி மாணவன் மனோகிதராஜ் ஜுட் சுரன்ராஜ் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார். இவர் மாவட்ட ரீதியாக முதல் இடத்தினையும் தேசிய ரீதியாக 69 வது இடத்தினையும் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் இம்முறை மருத்துவதுறைக்கு பத்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பொறியியல் துறைக்கு எட்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப துறையில் சிவபாதசுந்தரம் ஜதுஷியன் 3 ஏ சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனடிப்படையில் மருத்துவ துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் சாதனை
நேற்றைய தினம் வெளியாகியுள்ள 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் கணிதம், உயிரியல், வர்த்தகம் ஆகிய துறைகளில் சாதனை படைத்துள்ளனர்.
கணிதம், உயிரியல், வர்த்தகம் ஆகிய துறைகளில் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதனடிப்படையில், கணிதப்பிரிவில், ரவீந்திரா யதுசன் எனும் மாணவன் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 1ம் இடத்தினையும் தேசிய ரீதியில் 12ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
உயிரியல் பிரிவில் கிருசிகன் ஜெயனாந்தராசா எனும் மாணவன் 3 ஏ சித்திகளைப் பெற்று யாழ். மாவட்டத்தில் 1ஆம் இடத்தினையும் தேசிய ரீதியில் இரண்டாவது இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதேவேளை, வர்த்தக துறையில், சிவானந்தம் ரகுராஸ் எனும் மாணவன் 3 ஏ சித்திகளைப் பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 107ஆவது இடத்தினையும் பெற்றுள்ளார்.
இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமமான நெடுந்தீவில் யேசுதாசன் கிறிஸ்துராஜனுக்கு 3A
இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகளின் அடிப்படையில், இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமமான நெடுந்தீவு மகாவித்தியாலயத்தினை சேர்ந்த மாணவன் யேசுதாசன் கிறிஸ்துராஜன் 3A சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். கலைப்பிரிவில் 3A சித்திகளைப் பெற்றுள்ளதுடன், மாவட்ட நிலையில் 03வது இடத்தினையும் பெற்று கொண்டுள்ளார். இதேவேளை, தேசிய ரீதியில் 288வது இடத்தினையும் பெற்று யேசுதாசன் கிறிஸ்துராஜன் தாய் மண்ணுக்கும், பாடசாலைக்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பௌதீக விஞ்ஞான பிரிவு, உயிரியல் விஞ்ஞான பிரிவு, நுண்கலை பிரிவு, தொழில்நுட்ப பிரிவு ஆகிய பாடங்களில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி மாவட்டத்தில் முதலாமிடம்
வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில்,
டிக்கோயா பகுதியை வசிப்பிடமாக கொண்ட ராம் பிரசாத் பௌதீக விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.
ஹற்றன் நகர் பகுதியை வசிப்பிடமாகக் மாணவன் ஸ்ரீ மதுஷான் 3ஏ என்ற பெறுபேற்றைப் பெற்று, உயிரியல் விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.
தலவாக்கலை பகுதியை வசிப்பிடமாகக்கொண்ட மாணவி ஆர்.கபிஷா 3ஏ என்ற பெறுபேற்றைப் பெற்று , நுண்கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.
வட்டவளை பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட மாணவி எம்.மெரினா, தொழில்நுட்ப பிரிவில் 3ஏ என்ற பெறுபேற்றைப் பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.
இம்முறை இந்த கல்லூரியில் இருந்து 130 மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ளமை சிறப்பம்சமாகும் என கல்லுரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)