என்னை உங்களுக்கு தெரியுமோ எனக்கு தெரியாது. ஆனால் உங்களை எனக்கு 1980களில் இருந்து நன்கு தெரியம். பத்மநாபா தலமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் வரதராஜப்பெருமாள், சுரேஸ் பிறேமச்சந்திரன், யோகசங்கரி, கிருபாகரன் போன்றோருடன் ஒன்றாக இருக்கும் போது புரட்சிகர இராணுவத்தின் தளபதியாகவும், மத்தியகுழு உறுப்பினராகவும் இருந்த போதிருந்து உங்களைத் தெரியும்.
பினனர் உள்முரண்பாடுகளில் சிக்குண்டு சிரேஸ்ட உறுப்பினர்கள், இப்ராகிம், அசோக், பத்மன், சிவதாஸன் போன்றோருடன் வெளியேறி தனிக்கட்சி அமைத்து இந்தியாவில் கஸ்டப்பட்டதில் இருந்து சூழைமேட்டு துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் குற்றம்சாட்டப்பட்டது வரை உங்களை எனக்குத் தெரியும்.
உரும்பிராய் செண்பகம் உள்ளிட்டவர்களுடன் கடலில் சென்றபோது உங்கள் போட் தாக்கி அழிக்கப்பட்டதில் அனைவரும் உயிர்துறக்க நீங்கள் நீந்திக் கரை சேர்ந்ததும் எனக்கு ஞாபகம் வருகிறது.
அது போல் பிரமேதாஸாவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பில் கால்பதித்த உங்கள் மீதும் ஈபிடீபியின் மீதும் பச்சைப்புலிகள் தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது முதல், அவரது ஆசியுடன் மக்கள் குரல் வானொலியை இயக்கியமையினையும், அற்புதன் தலமையில் தினமுரசு பத்திரிகையை நடாத்தி தமிழ் வார இதழ் ஒன்று 1 லட்சம் வரையிலான விநியோகத்தை எட்டியதையும் மறக்க முடியவில்லை.
1989ல், 1994ல், 2000 அண்டில் 2001ல் 2004ல் 2010ல் 2015ல் இடம்பெற்ற பொதுத்தேர்தல்கள் எல்லாவற்றிலும் குறைந்தது 1ல் இருந்து கூடியது 9 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இருந்தமை, இவற்றில் சில தேர்தல்களில் தனித்தும் சிலவற்றில் ஆளும் தரப்புடன் இணைந்தும் போட்டியிட்டமை எல்லாம் நினைவில் வருகிறது.
புலிகளின் தொடர்தாக்குதல்களில் உங்கள் கட்சி உறுப்பினர்கள் கொல்லப்பட்டும், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற பின்பும், சற்றும் சளைக்காதவராய் அனைத்தையும் சுதாகரித்து விழ விழ மீண்டும் எழுந்து நிற்கும் உங்கள் துணிச்சலையும் நினைத்துப் பார்க்கிறேன்.
அற்புதன் கொழும்பில் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன் மீண்டும் உட்கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடும், அற்புதனை புலிகள் சுட்டார்களா? நீங்கள் சுட்டீர்களா? என்ற வாதப்பிரதிவாதங்கள் எழுந்து, உங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அசோக் (மு.சந்திரகுமார்) பதுமன் உள்ளிட்ட அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறியதும் அதன் பின்பும் தனியனாக நின்று போராடியதையும் மறக்க முடியவில்லை.
பின்னர் அசோக் என்ற மு. சந்திரகுமார் நாடு திரும்பி மீண்டும் உங்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் செல்ல இடம் விட்டமையும், மீண்டும் வெளியேறி தனிக்கட்சி அமைக்க இடம்கொடுத்தமையும் மனதில் வந்து போகின்றன.
தொடர்ந்தும் உங்களுடன் கைகோர்த்திருந்த தவராஜா மாகாணசபைக்காலத்தில் உங்களுடன் முரண்பட்டு தனித்தொதுங்கிய போதும், யாழில் பல முன்னணி உறுப்பினர்கள் கொலைக் குற்றச்சாட்டுகள், உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைதான போதும் அவற்றையும் கடந்து உங்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைத்து, நல்லாட்சி அரசாங்கத்தில் இணையாது எதிர்கட்சியாகி, கோத்தாபயவின் ஆட்சியில் பலமான அமைச்சை ஆட்கொண்டதுவரை உங்களின் ஒரு நீண்டதொரு வரலாறு திகைக்க வைக்கிறது.
நீங்கள் யாரோ ஒருவருக்கு கூறியதாக என்காதுகளுக்கு வந்த விடயம் ஒன்றையும் இந்த மடலில் குறிப்பிட வேண்டும் என நினைக்கிறேன். “போராட்ட களத்தில் நிற்கும் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட அனைவரும் ஒரு கட்டத்தில் இல்லாது போக நான் மட்டுமே எஞ்சியிருப்பேன” என கூறினீர்களாம். சரி அது மெய்பட்டதாக கருதிக்கொள்வோம்.
இப்போ அடுத்த கட்ட “டெஸ்ட் தொடரை” ஆரம்பித்து இருக்கிறீர்கள். ஆயிரமாயிரம் விமர்சனங்கள் குற்றச்சாட்டுகளை தாண்டி மீண்டும் பலமான அமைச்சராக உருவெடுத்திருக்கிறீர்கள். சரியோ பிழையோ விடுதலைப் போட்டத்தில் தோழராக இருந்தது முதல் இப்போ அமைச்சராக இருக்கும் வரை ஆயுத அரசியலும், நாடாளுமன்ற அரசியலிலும் உங்களுக்கு நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி உள்ளதனை மறக்க முடியாது.
அத்தகைய தொடர்ச்சியைகொண்டு நீங்கள் உங்கள் அரசியல் முதிர்ச்சியை அனுபவத்தை வெளிப்படுத்த வெண்டும். கடந்த காலத்தை விடுத்து உங்களை மக்கள் மாற்றாக சிந்திக்க வேண்டுமானால் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் உங்கள் அரசியல் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அதைவிடுத்து “எனக்கு மக்கள் போதிய ஆதரவை கடந்த தேர்தல்களில் தரவில்லை தந்திருந்தால் அந்தப் பலத்தோடு மக்களின் பிரச்சனைகளை தீர்த்திருப்பேன்” என பழைய பல்லவியையே திரும்பத்திரும்ப பாடுவதை நிறுத்துங்கள். உங்கள் கட்சியிடமும் ஒரு காலத்தில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 1989ல் இருந்து 2019வரை 30 வருடகாலம் 3 தசாப்பதம் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டு இருக்கிறீர்கள். இதில் கடந்த 5 வருடத்தை தவிர ஆட்சியில் இருந்த அரசாங்கங்களில் கபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். அரச தலைவர்களுடன் நேரடியாக தொலைபெசியில் உரையாடும் அளவிற்கு உங்கள் அதிகார மையம் இருந்த காலங்கள் உண்டு. அப்போதெல்லாம் சில வேலைவாய்ப்புகள், சில அபிவிருத்திகளை தவிர என்ன செய்தீர்கள் என மக்களும் உங்களிடம் கேள்வி கேட்கலாமே?
ஆக பெரும்பான்மை ஆட்சியாளர்களைப் போல், பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்துதான் எப்போதும் நல்லெண்ணமும், ஒத்துழைப்பும் வரவேண்டும் என எதிர்பார்ப்பதை விட முதலில் அந்த மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை முதலில் நீங்கள் ஆரம்பித்து வையுங்கள்.
குறிப்பாக இப்போதைக்கு உங்களிடம் ஈழத்தை கோரவில்லை. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாயாட்சி என்ற உங்கள் தாரக மந்திரத்தையும் கேட்கவில்லை. சம்ஸ்டியையோ, இணைந்த வடகிழக்கையோ கேட்கவில்லை. 13ஆம் திருத்தச்சட்டத்தையோ, அதற்கு மேலான பிளசையோ கேட்கவில்லை. பொதுத்தேர்ர்தலுக்கு முன்பாக குறைந்த பட்ச கோரிக்கைகளை முன்வைக்கிறேன். இவற்றை நடைமுறைப்படுத்துங்கள் மக்கள் உங்களை திரும்பிப் பார்க்கிறார்களா? ஆதரவு தருகிறார்களா என்பதனை பொதுத்தேர்தலில் பார்ப்போம்….
1) 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து விடுவித்தோம் என கூறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸவின் அமைச்சரவையில், அதனை நடைமுறைப்படுத்திய முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ தலைமையிலான ஜனாதிபதி ஆட்சியில் இருக்கும் நீங்கள், முதலில் அரசியல் கைதிகளை விடுவித்து மக்களுக்கு உங்கள் செயற்திறனை வெளிப்படுத்துங்கள். காரணம் இலங்கை அரசாங்கங்களின், படைத்தரப்பின் பார்வையில், சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விட, புலிகள் அமைப்பில் இருந்த போது பண்மடங்கு மோசமான தாக்குதல்களையும், அவற்றிற்கு திட்டமிட்டவர்களையும் அவ்வப்போது ஆட்சியில் இருந்தவர்கள் மன்னித்து விடுவித்திருக்கிறார்கள். அவ்வாறு விடுவிக்கப்பட்ட முன்னாள் புலிகள் இப்போது சுதந்திரமாக உலாவுகிறார்கள். அவ்வாறாயின் இந்த அரசியல் கைதிகளை விடுவிக்கவும் அதே சட்டத்தை பயன்படுத்த அரசாங்கத்திற்கு அழுத்தத்தைக் கொடுங்கள்.
2) காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து பாதிக்கப்பட்டோர் ஏற்றுக்கொள்ளும் தீர்வை முன்வையுங்கள்.
3) இலங்கைப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும், தனியாரின் அனைத்து காணிகளையும் விடுவியுங்கள்.
4) இலங்கையின் 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பிலும் அதன் பின்னான திருத்தங்களிலும் கூறியிருப்பதற்கு அமைவாக தமிழ்மொழிக்கான சம அந்தஸ்த்தை பெற்றுக்கொடுங்கள். தமிழில் தேசிய கீதத்தை பாடும் உரிமையை நிலைநாட்டுங்கள்.
5) வடக்கில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு, வாழ்வெட்டு, போதைப்பொருள் கடத்தல், சமூகவிரோத செயல்களை முழுமையாக கட்டுப்பாட்டுள் கொண்டுவாருங்கள்.
6) வடக்கிலும் கிழக்கிலும் தொடரும் திட்டமிட்ட சிங்கள பௌத்தமயமாக்கலை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள்.
7) யுத்தத்தினாலும் இயற்கை அழிவுகளாலும் வடகிழக்கில் குடும்பத் தலைவர்களை இழந்து நிற்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வறுமைநிலையை போக்க உடனடி வேலைவாய்ப்புக்கள், அல்லது முதலீட்டுக் கடன்களை வழங்குங்கள்.
8) அரச நியமனங்களில், உயர் பதவி நியமனங்களில் சிறுபான்மையினருக்கான விகிதாசார சமத்துவத்தையும் முன்னுரிமையையும் வழங்க நடவடிக்கை எடுங்கள்.
9) வடக்கு கிழக்கில் சிவில் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபடுவதை நிறுத்துவதோடு, சட்டத்தின் அடிப்படையிலான நீதித் துறையின் ஆட்சியை வலுப்படுத்துங்கள்.
பொதுத்தேர்தலுக்கு குறைந்தது 4 மாதங்கள் உண்டு. இந்தக் காலப்பகுதியில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து உங்களிடம் பேசவில்லை. மிகக் குறைந்தபட்ச கோரிக்கைகளான, மக்களின் அன்றாட வாழ்வுடன் பிணைந்த விடயங்களை சீர்செய்வது பற்றியே பேசுகிறேன். முடிந்தால் உங்கள் செயற்திறனை காட்டுங்கள். உங்கள் பின் மக்கள் அணிதிரள்வார்களா என்பதனை பொதுத்தேர்தல் திர்மானிக்கட்டும்…
இப்படிக்கு
நாகேஸ் நடா….