சட்டவிரோதமாக ரீயூனியன் தீவுக்குச் சென்ற நிலையில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 64 பேர் இன்றையதினம் பிரான்ஸ் அதிகாரிகளால் இன்றையதினம் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த 64 பேரும் 737- 800 போயிங் ரக விசேட விமானம் மூலம் இன்று மாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகடத்தப்பட்டவர்களில் 54 ஆண்கள், 6 பெண்கள், 4 குழந்தைகள் அடங்குவதாகவும் இவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, புத்தளம், அம்பாறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் படகு மூலம் சட்டவிரோதமாக ரியூனியன் தீவுக்கு நுழைந்து தங்கியிருந்த வேளையிலேயே, பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
2ஆம் இணைப்பு…. றீயூனியனுக்கு படகில் சென்றவர்கள், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்…
Feb 14, 2019 @ 06:03
சட்டவிரோதமாக ரீயூனியன் தீவுக்குச் சென்ற நிலையில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 70 பேரையும் இன்று நாட்டிற்கு திருப்பியனுப்புவதற்கு, பிரான்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று, பிரான்ஸின் விசேட விமானத்தினூடாக நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக, கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உதவி விசாரணை பணிப்பாளர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற படகொன்று காணாமல் போயுள்ளதாக படகின் உரிமையாளர் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நீர்கொழும்பு காவற்துறையில் முறைப்பாடு ஒன்று செய்திருந்தார். வே – பிரஷங்சா எனப்படும் நீண்ட நாள் மீன்பிடி படகொன்றே இவ்வாறு காணாமல் போயிருந்தது. அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் படகோட்டியாக செயற்பட்ட நபர், குறித்த 70 பேரிடமும் ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபா வரை அறவிட்டு பிரான்ஸின் ரீயூனியன் தீவு வரை அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் படகிலிருந்தவர்கள், கடந்த 5 ஆம் திகதி ரீயூனியன் தீவைச் சென்றடைந்தனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, புத்தளம், அம்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 70 பேர், மடகஸ்காருக்கு 175 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ரீ யூனியன் தீவுக்குச் சென்றுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு சென்றவர்களுள் 5 சிறு பிள்ளைகள் மற்றும் 8 பெண்கள் அடங்குவதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களம் தெரிவித்துள்ளது
றீயூனியன் தீவுக்கு படகில் சென்ற இலங்கையர்கள் 88 பேர் கைது…
Sep 11, 2018 @ 13:33
றீயூனியன் தீவுக்கு (Reunion Island) சட்ட விரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட 88 இலங்கையர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு கடற்பகுதிக்கு மேற்கே படகில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். றீயூனியன் தீவு என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு உட்பட்ட தீவாக விளங்குகிறது.
பின்னணி
றீயூனியன் தமிழர் என்போர் தமிழ்ப் பின்புலம் கொண்டறீயூனியன் நாட்டு குடிமக்கள். சுமார் 100000 மேலான குடிமக்கள் தமிழர்கள் என கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பான்மை 18 ஆம் நூற்றாண்டில் பிரான்சிய காலனித்துவ ஆட்சியாளர்களால் வரவழைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். றீயூனியன் நாட்டு மக்கள் தொகையினரில் 20% வீதமானோர் தமிழர்கள் என அறியப்படுகின்றது. இவர்கள் தங்கள் மொழியை இழந்தாலும் பரம்பரையாக தமிழ்ப் பெயர்களை சூட்டிக் கொண்டுள்ளனர். மேலும், பாண்டிச்சேரி இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டவுடன், பிரான்சு அரசு பாண்டிச்சேரிவாழ் மக்களுக்கு பிரான்சு குடியுரிமை வழங்க முன்வந்தது. இதன் மூலம் 150 பாண்டிச்சேரித் தமிழ்க் குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன.
கனபடி, வலியமா, மூடூசமி, விரபவுளி, சின்னப்பேன் என்னும் பெயர்கள் அதிகம் அறியப்படுகின்றன. இவை முறையே கணபதி, வள்ளியம்மா, முத்துச்சாமி, வீரபிள்ளை, சின்னப்பன் என்னும் தமிழ்ப் பெயர்களின் திரிபு. சில பாடசாலைகளில் தமிழ் மொழி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. தமிழ்ச் சங்கம் ஒன்றும் இயங்குகிறது. தங்களுக்கு இந்தியக் குடியுரிமையும் இந்தியப் பண்பாட்டைப் பேண பல்கலைக்கழகமும் வேண்டும் எனக் கோரியுள்ளனர். பாண்டிச்சேரி, சென்னை நகரங்களை புனித ஆன்றீசு, புனித டெனிசு ஆகிய நகரங்களுடன் தொடர்பில் வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.