அரசியல் தீர்வு தொடர்பில் முழுமையான பார்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருப்பதாக தெரியவில்லையெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் , அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..
அத்துடன், எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெளிமாவட்டங்களில் போட்டியிடுவதுத் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும், இன்னும் அதுத் தொடர்பில் தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சூரியன் எவ்.எம் வானொலியின் விழுதுகள் நிகழ்ச்சிக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், “புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டஉடனேயே அவருக்கு ஒருசில விடயங்களை நினைவுப்படுத்தியிருக்கிறோம். ஜனாதிபதிக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. இதனால், சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட வேண்டுமென நாம் பகிரங்கமாக ஜனாதிபதிக்கு தெரிவித்திருந்தபோதிலும், இவர் இதுவரையில் எந்தவிதமான பதிலையும் அவர் வழங்கவில்லை.
வடக்கு கிழக்குக்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் ஆராய்ந்துள்ளோம். இப்போதும் ஆராய்ந்து வருகிறோம். தீர்மானம் எடுக்கவில்லை. வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் கனிசமான தமிழர்களையும் கூட்டமைப்பு கண்டுக்கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு காணப்படுகின்றது.
வெளிமாவட்டங்களில் போட்டியிடுகின்றபோதும், அந்த மாவட்டங்களில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் தமிழ் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போட்டியிடுவதுத் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம்.
கொழும்பில் போட்டியிட்டால் மனோவுக்கு இரண்டு வகையில் தாக்கம் செலுத்தும். ஒன்று அவரின் வெற்றி வாய்ப்பை அது குறைக்கலாம், அல்லது அவரும் நாங்களும் இணங்கி வியுகம் அமைத்து போட்டியிட்டால், கொழும்பில் அவரது வெற்றி வாய்ப்பை குறைக்காமலும், இன்னொரு தமிழ் பிரதிதிநித்துவத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில், தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வுத் தொடர்பில் உள்வாங்கப்பட்டிருந்தது. ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதுத் தொடர்பில் எதனையும் குறிப்பிடப்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் கோட்டாபய ராஜபக்ஷவை உத்தியோகப்பூர்வமற்ற முறையில் சந்தித்து கலந்துரையாடியிருக்கிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதால், சஜித் பிரேமதாஸிவின் செல்வாக்கு குறையவில்லை” எனவும் தெரிவித்துள்ளார்.