தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் இல்லத்தில் பழைய இரும்புகளைத் திருடிச் சென்ற மூவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு கோப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கோப்பாய் – இராசபாதையில் உள்ள அவரது இல்லத்தில் இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் வெளியில் இருந்த வேளை, அவரது வீட்டுக்கு பின்புறமாக உள்ள மதிலால் வளவுக்குள் சென்ற மூவர், வீட்டின் பின்புறமிருந்த இரும்புக் கதிரைகள் உள்ளிட்ட பழைய இரும்புகளை திருடி முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
முச்சக்கர வண்டி சிறிது தூரம் பயணித்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் வீட்டில் பொறுப்பாகவிருந்தவர் துரத்திச் சென்று பிடித்துள்ளார்.
உடனடியாக அருகில் உள்ள கோப்பாய் காவல் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர்;, திருட்டில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மூவரையும் கைது செய்தததுடன் முச்சக்கர வண்டியையும் எடுத்துச் சென்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் வீட்டில் பொறுப்பாக இருந்தவர் நேற்றுமாலை கோப்பாய் காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் நேற்றிரவு தனது வாக்குமூலத்தை கோப்பாய் காவல் நிலையத்தில் வழங்கியிருந்தார்.
கைப்பற்றப்பட்ட பழைய இரும்புகள் தன்னுடையவை என அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
திருநெல்வேலி பாற்பண்ணை வீதியைச் சேர்ந்த மூவரே கைது செய்யப்பட்டு கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். #சரவணபவன் #திருடிய #கைது