ஜேஎன்யூவில் பயங்கரம்.. ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல்..மாணவர், பேராசிரியர்கள் மீது கடும் தாக்குதல்
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெரும் மோதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. மாணவர் யூனியன் தலைவர் ஆயிஷ் கோஷ் தாக்கப்பட்டு மண்டை உடைந்து ரத்தம் வரும் அளவுக்கு நிலைமை அங்கே மோசமாகியுள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக் கட்டணம் உள்ளிட்டவை சமீபத்தில் உயர்த்தப்பட்டன. இதை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி ஆதரவளிக்கவில்லை. இன்றும்கூட பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் கண்டன பேரணி நடத்தினர். அப்போது ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் இந்த பேரணியில் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதன் பிறகு வெளியிலிருந்து மேலும் பலரும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்துள்ளனர். அவர்கள் அனைவருமே முகத்தில் துணியை கட்டிக் தங்கள் அடையாளத்தை மறைக்கும் வகையில் புகுந்துள்ளனர். விடுதி அறைக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்து நொறுக்கி உள்ளனர். அவர்கள் கைகளில் உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்துள்ளன.
அப்போது மாணவர் யூனியன் தலைவரான ஆயிஷ் கோஷ் (பெண்) தலையில் அந்த நபர்கள் ஓங்கி அடித்துள்ளனர். இதனால் அவரது தலையில் இருந்து பெருமளவு ரத்தம் வழிந்தபடி இருந்தது. வீடியோ ஒன்றில் அந்த நிலையிலும், அவர் பேசியுள்ளார். முகத்தில் மாஸ்க் அணிந்த சிலர் என்னை மிக மோசமாக தாக்கினர். என்னால் இப்போது பேச முடியாத நிலையில் இருக்கிறேன், என்று தழுதழுத்த குரலில் ஆயிஷ் கோஷ் கூறுகிறார். அவரது தலையில் இருந்து ரத்தம் வடிவது அந்த வீடியோ காட்சிகளில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து ஆயிஷ் கோஷ் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
முதல் வன்முறைச் சம்பவம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள பெரியார் விடுதிப் பகுதியில் வைத்து நடந்ததாக கூறப்படுகிறது. பிறகு பிற பகுதிகளிலும் வன்முறை கும்பல் வெறியாட்டம் நடத்தியுள்ளது. பேராசிரியர்களும் தாக்கப்பட்டுள்ளனர். உதவிக்கு சென்ற ஆம்புலன்சுகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலின் பின்னணியில் ஏபிவிபி இருப்பதாக, இடதுசாரி மாணவர்கள், குற்றம் சாட்டுகின்றனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் யூனியன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலும் இதே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை ஏபிவிபி மாணவர் அமைப்பைச் சேர்ந்த ஒரு கும்பல் மாணவர்களைத் தாக்கியது. முதலாம் ஆண்டு எம்.ஏ. பயிலும் மாணவிக்கு இந்த தாக்குதலில் கால் முறிவு ஏற்பட்டது. இன்றைய தினம் மீண்டும் அவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.