கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தால் இன்று (06) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிணை
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்படவிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன ஓட்டுனரான துசித குமாரவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த நபர், சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகிய சந்தர்ப்பத்தில் அவரை ஜனவரி மாதம் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா தி சில்வா உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன் குறித்த சந்தேக நபரிடம் கடந்த 26 ஆம் திகதி சிறைச்சாலையினுள் வைத்து வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.