அமெரிக்காவின் டிரோன் படை தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்ட ஈரான் குவாட் ராணுவ படையின் தலைவர் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானியின் இறுதிச்சடங்கு மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த இறுதிச்சடங்கில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். கடந்த வாரம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் நடத்தியது. இந்த தாக்குதலில் முக்கியமான ஈரான் தலைவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனால் ஈரான் அமெரிக்கா இடையே போர் உருவாவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகிறது. இந்த போர் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப் போராக மாறும் என்றும் கூறுகிறார்கள்.
இதையடுத்து நேற்று சுலைமானி உடல் ஈராக்கில் இருந்து ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஈரானில் தலைநகர் டெஹ்ரானில் அவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடந்தது. வடகிழக்கு நாட்டின் தலைவர்கள், ஈரான், ஈராக்கை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். அதேபோல் பல லட்சம் பேர் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். 15 லட்சத்திற்கும் அதிகமான பேர் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகிலேயே யாருடைய இறுதிச்சடங்கிற்கும் இவ்வளவு மக்கள் கூட்டம் கூடியது கிடையாது எனத் தெரிவிக்கப்படுகிறது. மொத்தம் 30 கிமீ தூரத்திற்கு இந்த கூட்டம் நீண்டு இருந்தது. இந்த கூட்டம் எவ்வளவு தூரம் இருந்தது என்ற வீடியோ வெளியாகி உள்ளது . இவ்வளவு மக்கள் அந்நாட்டு அரசுக்கு ஆதரவு தருவது, அமெரிக்காவை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.
ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி ஈரானில் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தத்க்கது. இவர் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் அதிகாரம் மிக்கவராக திகழ்ந்தார். சிரியா போர் வர இவரும் ஒரு வகையில் காரணம். இவரை பலமுறை இப்படி கொல்ல சதி நடந்து இருக்கிறது. 1998ல் இருந்தே இவர் அந்த ராணுவ ஜெனரல் பொறுப்பில் இருந்தார். சுலைமானி நினைத்தால் ஈரானிலும், ஈராக்கிலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை இருந்தது. ஈரானை வலிமையாகியவர்களில் இவரும் முக்கியமானவர். அதனால்தான் இவரின் இறுதிச்சடங்கிற்கு இவ்வளவு மக்கள் கூடி இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. இந்த மக்கள் கூட்டத்தை பார்த்த ஈராக், அமெரிக்காவுடன் உறவை முறித்துக்கொள்ளும் எனவும், அமெரிக்க படைகளை ஈராக் வெளியே அனுப்பும் எனவும் எதிர்வுகூறல்கள் வெளியாகி உள்ளன.