யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி – முழங்காவில் ஊடாக கொழும்புக்கான பேருந்து சேவையை வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணம் சாலை முகாமைத்துவம் இடைநிறுத்தியமைக்கு எதிராக நேற்றிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை எதிர்வரும் நாள்களில் தொடரும் நிலை ஏற்படும் என்று வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து இரவு 8 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி – முழங்காவில் ஊடாக கொழும்புக்கான பேருந்து சேவையை யாழ்ப்பாணம் சாலை பேருந்து முன்னெடுத்தது. அதேநேரத்தில் கிளிநொச்சி சாலை பேருந்து கொழும்புக்கான சேவையை கிளிநொச்சி ஊடாக முன்னெடுத்தது. இந்த பேருந்து சேவைகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி சாலைகளின் நிர்வாகத்தின் இணக்கத்துடன் இடம்பெற்றுவந்தன.
இந்த நிலையில் நேற்றைய தினத்திலிருந்து யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி – முழங்காவில் ஊடாக கொழும்புக்கான பேருந்து சேவையை யாழ்ப்பாணம் சாலை முகாமைத்துவம் முன்னறிவித்தலின்றி இடைநிறுத்தியது. அத்துடன், யாழ்ப்பாணம் சாலை நடத்திய பேருந்து சேவையையும் சேர்த்து கிளிநொச்சி சாலை இரண்டு பேருந்து சேவைகளை முன்னெடுக்கின்றது.
யாழ்ப்பாணம் சாலை முகாமைத்துவத்தின் இந்த நடவடிக்கையால் யாழ்ப்பாணம் சாலையில் பணியாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர்.