ஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லி நோக்கி காரில் சென்ற போது தீவிரவாதிகளுடன் சிக்கிய காவற்துறை அதிகாரி தாவிந்தர் சிங்குக்கு 2001 நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீரில் ஶ்ரீநகர் விமான நிலைய டி,.எஸ்.பி.யாக பணிபுரிந்த தாவிந்தர் சிங், காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நவீது பாபு, ஆசிப் என்கிற 2 ஹிஸ்புல் தீவிரவாதிகளுடன் காரில் சென்ற போது காவற்துறையினரிடம் சிக்கினார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. அப்போது பீகார், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளியே நவீது பாபு. அவரை காவற்துறையினர் தேடி வந்த நிலையில் 2 தீவிரவாதிகளுடன் தாவிந்தர் சிங் சிக்கினார். தாவிந்தர் சிங் வீட்டில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.
தேடப்படும் தீவிரவாதிகளை அழைத்துக் கொண்டு தாவிந்தர் சிங் ஏன் டெல்லி நோக்கி சென்றார்? குடியரசு தினத்தில் நாசவேலைக்கு திட்டமிட்டிருந்தனரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2001-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தாக்குதலிலும் காவற்துறை அதிகாரி தாவிந்தர் சிங்குக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் 2013-ல் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு, தாவிந்தர் சிங் பற்றி தமது வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..