ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பல புதிய பயிர் ரகங்களை வெளியிட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக 13 புதிய ரகங்களை வேளாண் மற்றும் தோட்டக்கலை விவசாயிகளுக்காக இப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது . இதில் வேளாண் பயிர்கள் 7ம், தோட்டக்கலைப் பயிர்கள் 6ம் அடங்கும்.
இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இரண்டு புதிய நெல் ரகங்களில் ஒன்றான ‘கோ 53’, தமிழ்நாட்டின் வறட்சி பாதிப்புக்குள்ளாகும் ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு ஏற்றது. இது வறட்சி மற்றும் பகுதி வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய குறுகிய கால ரகம் ஆகும். மற்றொரு புதிய நெல் ரகமான ஏடீடி 54 அதிக மகசூல் தரக்கூடிய, மத்திய கால ரகம் மற்றும் வெள்ளை மத்திய சன்ன அரிசி ரகம் ஆகும். இவை அதிக அரவை திறன் உடையவை.
தோட்டக்கலைப் பயிர்களில் ஆறு ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன, அவற்றில் கோ 2 வாழை வீரிய ஒட்டு இரகம் பூவன் வாழை போன்ற தோற்றத்தில் இருக்கும். இவை ஹெக்டயருக்கு 32 டன்கள் மகசூல் தரும். மேலும், வாழையைத் தாக்கும் நூற் புழு மற்றும் வாடல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. இது விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது
‘புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மரவள்ளி ஒய்டிபி 2 ரகம் எக்டருக்கு 46.2 டன் கிழங்கு மகசூல் கொடுக்கும். இதில் மாவுச்சத்து 30 சதவீதம் இருக்கிறது.
மணத்தக்காளி கோ1 ரகம் கீரை மகசூலாக எக்டருக்கு 30 முதல் 35 டன் கொடுக்கிறது. இது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஊட்டச் சத்து மிகுந்த கீரையாகும் மருந்தாகவும் பயன்படுகிறது. வீட்டு தோட்டம் மாடி தோட்டத்தில் வளர்க்க ஏற்றது’ என வேளாண் ஆராய்ச்சிப்பிரிவு தெரிவித்துள்ளது.
புதிய ரகங்களின் பட்டியல்:
நெல் கோ 53, நெல் ஏடீடி 54, கரும்பு சிஒசி 13339, பருத்தி கோ 17, உளுந்து வம்பன் 11, சோளம் கோ32, திணை ஏ டி எல் 1, வாழை கோ2, தக்காளி கோ4, சிறிய வெங்காயம் கோ6, மரவள்ளி ஒய்டிபி2, கொடுக்காப்புளி பிகேஎம் 2 மற்றும் மணத்தக்காளி 1.
BBC