சிரியாவில் ஜனாதிபதி ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே இடம்பெற்ற கடும் சண்டையில் ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி முதல் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அவ்வப்போது சண்டை நிறுத்தங்கள் வந்தாலும், போர் முடிவுக்கு வந்தபாடில்லை.
உள்நாட்டுப்போர் முடிவுக்கு வர வேண்டுமானால் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இத்லிப் மாகாணத்தை அவர்களின் பிடியில் இருந்து விடுவித்தாக வேண்டும் என்பது சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் உறுதியான கருத்தாக உள்ளது.
இந்த நிலையில் சிரியாவில் கடைசியாக ரஷியா, துருக்கி ஆகிய நாடுகள் மேற்கொண்ட சமரச முயற்சிக்கு பின்னர் கடந்த 12-ந் தேதி சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஆனால் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் அங்கு இத்லிப் மாகாணத்தின் மாரெட் அல் நுமான் நகர பகுதிகளில் ஜனாதிபதி ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இந்த சண்டையில் ஒரே நாளில் இரு தரப்பிலும் சேர்த்து 39 பேர் பலியாகினர்.
கிளர்ச்சியாளர்கள் படையில் 22 பேரும், அதிபர் ஆதரவு படையில் 17 பேரும் பலியானதாக பிரித்தானியாவைத் தலைமையகமாக கொண்டு செயல்படுகிற சிரியா மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு கூறியது.
இதற்கிடையே இத்லிப் நகரத்தில் போர் விமானங்கள் பறந்து குண்டு தாக்குதல்களை தேற்கொண்டுள்ளன. இந்த தாக்குதலில் அங்குள்ள சந்தை கடைகள், கார்கள் எரிந்தன. அப்பாவி மக்கள் 18 பேர் பலியாகினர்.
இந்த வான்தாக்குதலை ரஷியா மற்றும் சிரியா போர் விமானங்கள் நடத்தியதாக இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு செயல்படுகிற சிரியா மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு கூறியது.
இத்லிப் மாகாணத்தில் சண்டை வலுத்து வருகிற நிலையில், அங்கு வசித்து வந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஊரை விட்டு இடம் பெயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.