தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை இலங்கைக்கு உள்ளேயே பெற்றுக் கொள்ள வேண்டும். வெளிநாடுகள் வந்து எமக்கான தீர்வுகளை பெற்றுத் தர முடியாது என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அழிவு யுத்தம் நடைபெற்ற போது எமது மக்கள் தம்மை விட்டு சர்வதேச சமூகம் வெளியேறக் கூடாது என்று காலில் விழுந்து அழுதபோதும் அதைக் கண்டுகொள்ளாமல் எமது மக்களை அழிவுகளுக்குள் கைவிட்டுச் சென்ற சர்வதேசம், எமது மக்களுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கு ஒருபோதும் வரப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தில் தீர்வு இருப்பதாக போலித் தமிழ் தேசியம் பேசும் சுயநலவாதிகள் தற்போது பழைய மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அழுதும் பிள்ளையை அவளே பெறவேண்டும் என்பதுபோல் தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைகளுக்கும் அபிவிருத்தி பிரச்சினைகளுக்கும் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு நாமே நடைமுறைச் சாத்தியமான வழியில் முயற்சிக்க வேண்டும்.
இன ஐக்கியம், தேசிய நல்லிணக்த்தின் ஊடாகவே தேசிய அரசியல் பிரச்சினைக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண வேண்டும். அவ்வாறில்லாமல் சர்வதேச சமூகத்திடம் தீர்வு இருப்பதாகவும் கூறி தொடர்ந்தும் தமிழ் மக்களை தவறான பாதையில் இழுத்துச் சென்று, மேலும் பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடுவதற்கும் இருக்கின்ற பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருப்பதற்குமே சுயநல அரசியல் தலைமைகள் முயற்சிக்கின்றனர் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.