தனது மைத்துனனை கோடாரியால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தி அவரது உயிரிழப்புக் காரணமான குடும்பத் தலைவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.
2016ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் குப்பிளான், சமாதி கோவிலடியில் சீவரத்தினம் ஜீவராஜ் (வயது 38) என்பவர் அவரது மைத்துனர் ரத்தினம் நகுலேஸ்வரன் என்பவரால் கோடாரியால் வெட்டப்பட்டார்.
மார்பில் கோடாரி பாய்ந்ததால் படுகாயமடைந்த சீவரத்தினம் ஜீவராஜ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி 3 நாள்களின் பின் அவர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் ரத்தினம் நகுலேஸ்வரன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற சுருக்கமுறையற்ற விசாரணையின் கட்டளையின் அடிப்படையில் எதிரிக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டை முன்வைத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 2019.07.15ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.
வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன், சாட்சிகளை நெறிப்படுத்தினார். எதிரி சார்பில் அரச செலவில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சிவலிங்கம் ரிஷிகேசன் முன்னிலையானார்.
உயிரிழந்தவரின் மனைவி உள்ளிட்ட சிவில் சாட்சிகள், பொலிஸ் சாட்சிகள் மற்றும் நிபுணத்துவ சாட்சி நிறைவடைந்த நிலையில் மேல் நீதிமன்றினால் வழக்கு தீர்ப்புக்காக இன்று நியமிக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் வழக்கு தீர்ப்புக்காக இன்று அழைக்கப்பட்டது. எதிரி மன்றில் முன்னிலையானார்.
“இரண்டு தரப்புக்கும் ஆறாத பகை காணப்பட்டிருந்த போதும் சம்பவ தினத்தன்று மாலை மங்கிய வேளையில் திடீரென ஏற்படுத்தப்பட்ட தர்க்கத்தின் பேறாக உணர்ச்சி வயப்பட்டு, தன்னிலை மறந்து, தம்மை பாதுகாக்க வேண்டிய நிமிர்த்தம் எதிரி செயற்பட்டிருப்பதாக அளிக்கப்பட்ட விளக்கம், அனைத்து சாட்சியங்களின் தொகுப்பின் போதும், பகுப்பின் போதும் தெளிவாகின்றது. இந்த வகையில் எதிரி இறந்தவரை கொலை செய்யும் நோக்குடன் செயற்பட்டிருக்கவில்லை என மன்று கொள்கின்றது.
எனவே சீவரத்தினம் ஜீவராஜை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கம் எதிரியிடம் கணப்பட்டதாக எண்பிக்கப்படாத நிலையில், எதிரி தண்டனைச் சட்டக்கோவை 296ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படவேண்டியவர் என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
எனினும் சீவரத்தினம் ஜீவராஜ் என்பவருக்கு உயிரிழப்பை ஏற்படுத்தியமையால் குறைந்த குற்றச்சாட்டாகிய கொலையாகாத குற்றத்துக்கிடமான மனித உயிர் போக்கல் என்ற குற்றத்தை இழைத்தமையினால் தண்டனைச் சட்டக்கோவை 297ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படவேண்டிய தவறிழைத்ததான குற்றச்சாட்டுக்கு எதிரி குற்றவாளியாக மன்றினால் காணப்படுகிறார்” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.
குற்றத்துக்கு எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தண்டனைத் தீர்ப்பளித்தது.