அடுத்த வார ஆரம்பத்தில் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (16) மாலை நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாச கட்சியின் தலைவராக தெரிவுச் செய்யப்பட வேண்டும் என தீர்மானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இதன் போது தெரிவித்தார்.
எனினும் நேற்றைய கூட்டம் எந்தவித இணக்கபாடும் இன்றி நிறைவடைந்தாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று முதல் கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.