காவல் நிலையத் தடுப்புக் காவலில் வைத்து சந்தேக நபரொருவரை மிக மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் கடமையாற்றிய உப காவற்துறைப் பரிசோதகர் ஒருவரே அவ்வாறு யாழ்ப்பாண காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
ஊர்காவற்துறை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நபரொருவருடன் முரண்பட்டார் எனும் சந்தேகத்தில் சந்தேக நபர் ஒருவரை குறித்த உப காவற்துறை பரிசோதகர் உள்ளிட்ட காவற்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை காவற்துறை நிலைய தடுப்பு காவலில் வைத்து உப காவற்துறை பரிசோதகர் மிக மோசமாக தாக்கியுள்ளார். அதில் கையில் வெடிப்பு ஏற்பட்டு இரத்தம் வந்த நிலையிலும் மிக மோசமாக தாக்கியுள்ளார்.
சந்தேக நபர் தாக்குதலுக்கு இலக்காகி இரத்த காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் அவரை மருத்துவ மனையில் அனுமதிக்காது ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் காவற்துறையினர் முற்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபரின் உடலில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் நிலை குறித்து அவதானித்த நீதிவான் அது தொடர்பில் சந்தேக நபரிடம் வினாவிய போது, தன்னை காவற்துறை நிலைய தடுப்பு காவலில் வைத்து உப காவற்துறைப் பரிசோதகர் மூர்க்கத்தனமாக தாக்கியதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அதனை அடுத்து சந்தேக நபரை வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தி சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவற்துறையினருக்கு உத்தரவிட்டதுடன், உப காவற்துறை பரிசோதகர் தொடர்பில் காவற்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவற்துறை உயர் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.
அதேவேளை குறித்த உப காவற்துறை பரிசோதகர் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளை பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவரது தனிப்பட்ட ஒழுக்கங்கள் தொடர்பிலும் குற்றம் சாட்டினர்.
—