கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வியாபாரத்துக்கு என எடுத்துச் செல்லப்பட்ட உயிர்க்கொல்லி ஹெரோயின் போதைப்பொருளை பக்கெட் செய்து கொண்டிருந்த போது 2 பெண்கள், 2 ஆண்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தெல்லிப்பளை, வித்தகபுரம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்த நான்கு பேரும் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 5 கிராம் 6 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அதன் பெறுமதி சுமார் 3 லட்சம் ரூபாயாகும்.
வீட்டை காவற்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர் என அறிந்த சந்தேகநபர்கள் சுமார் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மண்ணுக்குள் போட்டு கலந்துள்ளனர். மிகுதி பக்கட்டுக்களில் பொதி செய்யப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளே மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் வித்தகபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஆணும் 31 வயதுடைய பெண்ணும் கொழும்பு, மோதரையிலிருந்து சென்றிருந்த 31 வயதுடைய ஆணும் 25 வயதுடைய பெண்ணும் அடங்குகின்றனர்.
காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான மூத்த காவற்துறை அத்தியட்சகர் சி.டபிள்யூ. சேனாதீர தலைமையிலான சிறப்பு காவற்துறை குழுவினர் இன்று மாலை 3 மணியளவில் முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கைகயின் போதே இந்த கைது இடம்பெற்றது.
சந்தேகநபர்கள் தெல்லிப்பளை காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.–