சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 300- யை தாண்டியுள்ளது. மேலும், 14 ஆயிரம் பேருக்கு நோய் பாதிப்பு உறுதியாகி உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இறப்பவர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்துகொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் வரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 259 ஆக அதிகரித்திருந்தது.
இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. சீனாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பியவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது. உலக சுகாதார நிறுவனமும் சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்.
இந்நிலையில், சீனாவில் நேற்று காலை ஒரே நாளில் 45 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்தது.
புதிய கொரோனா வைரஸ் மேலும் 14 ஆயிரம் பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது என சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வைரஸ் பாதிப்பை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் – சீனாவிற்கு வௌியே முதலாவது மரணம் பதிவானது
உயிர்கொல்லி கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவிற்கு வௌியில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு பிலிப்பைன்ஸில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. 44 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோல், உயிரிழந்த நபர் சீனாவின் வுஹான் நகரில் இருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி சென்றவர் என தெரியவந்துள்ளது.