ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் ஆட்சி நீண்ட நாள்களுக்கு நிலைக்காதென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவார் எனத் தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷான் ஹேவாவிதான எதிர்கட்சி பலவீனமானால் மாத்திரமே அந்த ஆட்சி நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துத்தை தொடர்ச்சியாக தன்வசம் வைத்திருக்க முடியாதென தெரிவித்த அவர், அவ்வாறு தலைமைத்துவத்தில் நீடிப்பது கட்சியின் நெறிமுறைகளுக்கு புறம்பானதெனவும் தெரிவித்தார்.
அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐ.தே.கவின் மாகாண சபை உறுப்பினர்களுக்கான கூட்டமொன்று நடைபெற்றதால், அதற்கு பதிலடியாக ஐ.தே.கவின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்ட முயன்றதாவும், அந்த கூட்டத்துக்கு 6 பேர் மாத்திரமே சென்றிருந்தமை வேடிக்கையானதெனவும் தெரிவித்தார்.
அதனால், எதிர்க்கட்சிக்குள் தொடரும் இவ்வாறான நெருக்கடிகளுக்கு நெறிமுறைகளை பின்பற்றி தீர்வு காண முடியாதென தெரிவித்த அவர், அதற்கான அடுத்தகட்ட காய் நகர்த்தல் ஒன்றை மேற்கொள்ள வேண்டியது அவசியமெனவும், அதற்கான அழுத்தங்கள் தற்போது உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.