இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பதாக தென்கிழக்கு ஆசிய பசுமை அமைப்பின் சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் அனல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எரி பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழப்பதுடன் பலர் நோய்க்கு ஆளாவது அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது 9 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு சுற்றுச்சூழல் மாசுவினால் குறை பிரசவம் ஏற்படுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளை அஸ்துமா தாக்குலதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு நோய்களையும் உருவாக்குவதுடன் பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றுக்கும் காற்று மாசு காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் பொருளாதார ரீதியாகவும் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு 10 லட்சத்து 70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இதை தவிர்க்க மரபு சாரா எரிசக்தி முறைகளை அதிக அளவில் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. #காற்றுமாசு #உயிரிழப்பு #இந்தியா