ஷவேந்திர சில்வாவிற்கு எதிரான தடையை கூட்டமைப்பு வரவேற்றுள்ளது..
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று (15) அதிகாலை அறிக்கை ஒன்றை விடுத்து இந்த விடயத்தை வரவேற்றுள்ளார்.
யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலமாக பொறுப்புகூறலை தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசாங்கத்தின் கண்களை இந்த தடை திறக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இந்த விடயத்தை தாம் கருதுவதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆகவே இலங்கை அரசாங்கம் இனியாவது சர்வதேச விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு இடமளிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் குடும்பத்தார் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்துள்ளமைக்கு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கம், அந்த தீர்மானத்தை மறு பரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளது.
குறிப்பாக அவர் இராணு தளபதியாக பதவியேற்று 6 மாதங்களின் பின்பே இவ்வறானதொரு தீர்மானத்தை அமெரிக்கா அறிவித்துள்ளதெனவும், மேற்படி தீர்மானத்துக்கு சாதனமானவை என குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களில் எந்தவித உண்மைகளும் இல்லையெனவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், சவேந்திர சில்வா மீது முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என்பதோடு, தற்போதுள்ள இராணு அதிகாரிகளின் சிரேஷ்ட தரத்தை கருத்தில் கொண்டே அவருக்கு இராணுவ தளபதி என்ற பதவிநிலை வழங்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க ஷவேந்திர சில்வாவுக்கு தடை
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்காவிற்கு பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் பொம்பியோவால் வௌியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு எதிராக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.