போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை இராணுவத்தளபதி மீது அமெரிக்கா தடைகளை விதிக்கிறது..
வோசிங்டனிலிருந்து “த கார்டியன்” இற்காக ஜூலியன் போகரால் எழுதப்பட்ட இப்பத்தி தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகளால் மொழியாக்கப்பட்டுள்ளது.
• பாரிய மனித உரிமை மீறல்களுக்காக சவேந்திரசில்வா கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்
• உள்நாட்டுப் போரின் இறுதி கட்டங்களில் 70,000 தமிழர்கள் வரை கொல்லப்பட்டனர்
2009 ஆம் ஆண்டு தமிழ்ப் புலிகளினுடனான மோதலின் இறுதிக்கட்டங்களில் போர்க்குற்றங்கள் இழைத்தமைக்காக இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினென்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மீது அமெரிக்கா தடைவிதித்துள்ளது. இந்த மோதலில் 70,000 தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான அமெரிக்காவின் பயணத்தடையானது, படுகொலைகளில் முன்னணி சந்தேக நபர்களான எவரேனும் உலக அரங்கில் பொறுப்புக்கூறலுக்குட்பட்ட முதல் தடவையாக அமைகின்றது.
மிருகத்தனமான எதிர்க்கிளர்ச்சியின் போது அன்று பாதுகாப்புச் செயலாளராகவிருந்த கோத்தாபய ராஜபக்ச சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 3 மாதங்களின் பின்னர் இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவரது தேர்தல் வெற்றியால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து விலக்களிக்கப்படும் நிலைமை திரும்பலாம் என்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் பாரிய அச்சுறுத்தல் நிலவுமென்றும் அச்சம் நிலவுகின்றது.
தான் இறுதித் தாக்குதல்களை மேற்கொள்ளவிருப்பதால், பத்தாயிரக்கணக்கான பொதுமக்களை பாதுகாப்புத்தேடி வருமாறு இலங்கை அரசாங்கம் அழைப்புவிடுத்துப் பிரகடணப்படுத்திய “போர்த் தவிர்ப்பு வலயம்” மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாகக் குற்றஞ்சுமத்தப்படும் இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக 2008- 2009 காலப்பகுதியில் சவேந்திரசில்வா பணியாற்றினார்.
சவேந்திரசில்வாவின் கட்டளைக்குட்பட்ட துருப்புகளிடம் சரணடைந்த பின்பு நூற்றுக்கணக்கான தமிழ்ப் புலிப் போராளிகள் காணாமல்போயுள்ளனர். 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் இவர் இராணுவத்தளபதியாகப் பதவியுயர்த்தப்பட்டமையானது பரவலான பதட்டத்தையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இராணுவத்தை வழிநடத்திய மோசமான தளபதிகளில் ஒருவரை நியமித்தாலும் அது எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் இந்தப் பூமியில் எப்படிச் சிந்திக்கிறது என இலங்கையில் நடைபெற்ற பாரிய குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறல் நிகழ வேண்டுமென வாதிடும் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகிய பிரான்சிஸ் கரிசன்,கூறியுள்ளார்.
சவேந்திரசில்வாவினை இராணுவத்தளபதியாகப் பதவியுயர்த்தியமையானது சர்வதேச சட்டங்கள் புறந்தள்ளப்படுவதையும் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் அவமதிக்கப்படுவதையும் காட்டுகிறது.
இராணுவத்தின் பிடியிலிருந்த நிலையில் காணாமபோன நூற்றுக்கணக்கான தமிழர்கள் இராணுவத்திடம் சரணடந்தமையை தாம் கண்ணால் கண்டதாக கண்கண்ட சாட்சியங்கள் தெரிவிக்கின்றன என “Still Counting the Dead” என்ற நூலின் ஆசிரியரான பிரான்சிஸ் கரிசன் கூறியுள்ளார். காணாமல்போன தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என தெரியாமல் தமது பிள்ளைகளின் படங்களைத் தாங்கியவாறு தெருவோரத்தில் வேகின்ற வெயிலில் ஆண்டுக்கணக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
“இது நீதி அல்ல. இது அவமானம்”
2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டவிரோதக் கொலைகள் குறித்துப் பொறுப்புக்கூற வேண்டியவராக அதற்குக் கட்டளைப் பொறுப்பில் இருந்த சவேந்திரசில்வா இருக்கிறார்.
பாரிய படுகொலைக் குற்றவாளிகளைக் கண்டறிய ஒரு பொறிமுறை அமைக்கப்படும் என ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட ஐ.நா மனித உரிமை கவுன்சில் தீர்மானங்களை இலங்கை புறக்கணித்துள்ளது.
சவேந்திரசில்வா இராணுவத்தளபதியாகவும் கோத்தாபய சனாதிபதியாகவும் பதவிக்கு வந்துள்ளமையால், தாம் அளித்த வாக்குமூலங்களைத் திரும்பப்பெற வேண்டிய அழுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் சாட்சியங்களும் இருக்கின்றார்கள் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியாவுக்கான இயக்குனரான மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகளை மீளப்பெற்று ஆர்ப்பாட்டங்களைக் கைவிடுமாறு காணாமல்போனோரின் குடும்பங்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் என கங்குலி மேலும் தெரிவித்தார். காணாமல்போனோரின் திட்டங்கள் மற்றும் கூட்டங்கள் பற்றித் தகவல் கேட்டு இலங்கையின் புலனாய்வு அமைப்பினர் காணாமல்போனோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் அழைக்கின்றனர்.
“மனித உரிமைகளை ஊக்குவிக்கவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான நபர்களை பொறுப்புக்கூற வைக்கவும், பாதுகாப்புத்துறை சீர்திருத்தத்தை முன்னெடுக்கவும் நீதியையும் நல்லிணக்கத்தையும் ஊக்கிவிக்கும் தனது கடப்பாட்டைப் பேணவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாங்கள் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்” என அமெரிக்காவின் தடையை அறிவித்து வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.