ஶ்ரீ லங்கன் விமான சேவையின் எயார் பஸ் பரிவர்த்தனை சட்டமா அதிபரின் ஆலோசனை இல்லாமல் இடம்பெற்றுள்ளதாக கோப் குழுவில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழு நேற்று (19) கூடிய நிலையில் ஶ்ரீ லங்கன் விமான சேவையின் எயார் பஸ் பரிவர்த்தனை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஶ்ரீ லங்கன் விமான சேவையின் பிரதானிகள் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஶ்ரீ லங்கன் விமான சேவை விமானங்களை கையகப்படுத்தும் ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்காக சரியான வழிமுறைகள் இல்லாத காரணத்தால் மொத்த இழப்பீட்டுத் தொகையாக 115.77 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்திய சம்பவம் தொடர்பில் கோப் குழு தமது அதிருப்தியை வௌிப்படுத்தியிருந்தது.
ஶ்ரீ லங்கன் விமான சேவை வசம் 19.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே இருந்த நிலையில், 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த ஒப்பந்தம் ஏன் செய்யப்பட்டது என கோப் குழுவினரால் ஶ்ரீ லங்கன் விமான சேவை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
பணிப்பாளர் சபையில் சில மாற்றங்கள் இடம்பெற்றாலும் இதுபோன்ற முறைகேடுகள் அதிகாரிகள் கவனத்திற்கு வராமல் இடம்பெற்றிருக்காது என சுட்டிக்காட்டிய கோப் குழுத் தலைவரால் இது தொடர்பில் சட்டமா அதிபரின் அவதானத்தை பெற்றுக் கொள்ளுமாறு கணக்காய்வாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.