இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

டயகம தோட்டத்தில் தீ விபத்து – 06 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

(க.கிஷாந்தன்)

டயகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட டயகம தோட்டத்தில் (இன்று) 20.02.2020  ஏற்பட்ட தீ விபத்தில் 6 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.   குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 6 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 6 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனையடுத்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 2 மணித்தியாலயத்தின் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கிரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது.  சில வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதனையடுத்து 6 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் மூலமாகவும், அக்கரப்பத்தனை பிரதேச சபை ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் டயகம காவல்துறையினர், நுவரெலியா காவல்துறை கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளை அமைப்பதற்கு சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்திற்கு விஜயம் செய்திருந்த முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பீ.சக்திவேல் தெரிவித்தார்  #டயகம   #தீவிபத்து  #குடியிருப்புகள்  #தீக்கிரை

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.