சீனாவை புரட்டிப்போட்ட கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடாக தென்கொரியா உள்ள நிலையில், நேற்று (வியாழக்கிழமை) அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, தென்கொரியா முழுவதும் கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் தென்கொரியாவில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 156ஆக அதிகரித்துள்ளது.
மேலும் சீனாவில் நேற்று மட்டும் 118 பேர் கொரோனாவினால் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்ட 889 பேரையும் சேர்த்து இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,465ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,109 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சீனாவின் சுகாதார ஆணையகம் அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #தென்கொரியா #கொரோனா #பாதிக்கப்பட்டோர் #சீனா