சின்னத்தை மாத்திரம் கண்டு, கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பவர்கள், மலையக மக்கள் எனக்கூறி அந்த மக்களை அவமானப்படுத்த வேண்டாம். கடந்த காலங்களில் அவர்கள், யானை, பூனை, அன்னம், வெற்றிலை, வேப்பிலை, ஏணி என எத்தனையோ சின்னங்களுக்கு சிந்தித்து வாக்களித்துள்ளனர். பல சந்தர்ப்பங்களில் நகர மக்களை விட அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். சிலருக்கு யானை சின்னம் வேண்டும் என்பதற்காக மலையக மக்களை இதில் இழுக்க முயல்கிறார்கள். மலையகத்தோர் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கும் மக்கள் என கூறுகிறார்கள்.
அப்படி கூறி அவர்களை அவமானப்படுத்த வேண்டாம். அவமானப்படுத்தி என் கோபத்தை கிளற வேண்டாம். எனக்கு வெறுப்பேற்றினால் நான் சும்மா இருக்க மாட்டேன். இது உங்களுக்கு தெரியும் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கருத்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
உண்மையில் இங்கே சின்னம் ஒரு பிரச்சினை இல்லை. அது டீலர்” களின் பிரச்சினை. நான் “டீலர்” இல்லை. நான் ஒரு “லீடர்”. எங்களை பொறுத்தவரையில், யானை கிடைத்தால் நல்லது. அன்னம் கிடைத்தாலும் நல்லது. எமது கூட்டணிக்கு யானையை தர யார் மறுக்கிறார்கள் என தேடி பாருங்கள். அப்போது உரிய விடை கிடைக்கும். இவர்களது நோக்கம் இப்படி எதையாவது சொல்லி, எமது கூட்டணி அமைவதை தாமதம் செய்வது ஆகும். இந்த தந்திரம் எம்மிடம் இந்த முறை பலிக்காது. இன்னும் இரண்டு தினங்களில் நாம் எமது கூட்டணி அமைவதை அதிகாரபூர்வமாக நாம் அறிவிப்போம்.
யானை இருந்தால் தான் கூட்டணி அமைக்க முடியும் என்று கூறுபவர்கள் அதை எமக்கு தர வேண்டும். தரவும் மாட்டீர்கள். யானை என்று ஓலம் இட்டுக்கொண்டும் இருப்பீர்கள். அப்புறம் அன்னம் என்பீர்கள் அதையும் இழுத்தடிப்பீர்கள்.
போதாதற்கு யானைக்கு மாத்திரமே மலையக மக்கள் வாக்களிப்பார்கள் என கூறி என்னை வெறுப்பேற்றாதீர்கள். எனக்கு வெறுப்பேற்றினால் நான் சும்மா இருக்க மாட்டேன். இது உங்களுக்கு தெரியும். கொள்கைகளை பார்த்து, ஆளைப்பார்த்து, கட்சியை பார்த்து, தெளிவுடன் வாக்களிக்க மலையக மக்களுக்கு முடியும். தெரியும். கண்ணை மூடிக்கொண்டு, பொய்களை நம்பி, பயந்து, நமது மக்கள் வாக்களித்த காலம் இன்று மலையேறிவிட்டது.
சின்னத்தை சொல்லி, சொல்லி, காட்டி, காட்டி, இழுத்தடிப்பது, ஆளுகின்ற அரசுடன் போடப்படும் “டீல்”. ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள்ளேயே சாயம் வெளுத்து வரும் இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று தரும் “டீல்”. இந்த உண்மையை வெளியேசொன்னால், உங்களுக்கு என் மீது கோபம் வருகிறது. உங்களை போன்ற “டீலர்”களுக்கு மசிகின்றவன் நானல்ல. உங்கள் “டீல்”களை அப்படியே ஏற்றுக்கொள்ள நான் ஒரு “டீலர்” இல்லை. நான் ஒரு “லீடர்”. இதை மறக்க வேண்டாம்.