Home இலங்கை கூட்டமைப்பாக இணைந்திருப்பது ஆசனப் பங்கீட்டுக்காக அல்ல…

கூட்டமைப்பாக இணைந்திருப்பது ஆசனப் பங்கீட்டுக்காக அல்ல…

by admin

கூட்டமைப்பாக கட்சிகள் இணைந்திருப்பது ஆசனங்களைப் பெற அல்லவென்றும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கே என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.

கேள்வி: பாராளுமன்றத் தேர்தலொன்று அறிவிக்கப்பட உள்ளதே?

பதில் – பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட வேண்டிய திகதிகள் குறித்து தற்போது தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அந்தத் தேர்தல் இன்னும் சில காலம் பின்னுக்குப் போவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் சில கதைகள் உள்ளன.

ஆனாலும் எதுவும் சரியாக இருக்குமென்றோ அல்லது வருமென்றோ இப்போது எனக்குத் தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயார் நிலையிலே தான் இருக்கின்றார்கள்.

குறிப்பாக வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்ட பின்னர் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அதன் பின்னர் கூட்டமைப்பாக எங்களது கொள்கைகளை முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொள்வோம்.

கேள்வி – கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்தத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றீர்கள்?

பதில் – கூட்டமைப்பு ஒரு பலமான கட்சியாக இருக்கின்ற போது நிச்சயமாக அது விமர்சனத்திற்கு உள்ளாகும். மற்றக் கட்சிகளைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பின் மீது விமர்சனம் வைப்பதைத் தவிர வேறேதும் அவர்கள் செய்யவில்லை.

அவர்கள் தொடர்ந்தும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டு தான் இருப்பார்கள். அந்த விமர்சனத்தின் மூலம் தாங்கள் தங்களுடைய கட்சியினுடைய வாக்கு வங்கியை உயர்த்த முடியுமென்று யோசிக்கின்றார்களே தவிர தாங்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று சொல்லி வாக்கைக் கேட்பதாகத் தெரியவில்லை.

கேள்வி: சமகால அரசியல் நிலைமைகளில் தமிழ்த் தரப்புக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென்று வலியுறுத்தப்படுகின்றமை தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் – தமிழ்த் தரப்புக்கள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டியது அவசியமானது. ஏனென்றால் இன்றைய புதிய அரசு முன்னெடுக்கும் செயற்பாடுகள் அவர்களது சிந்தனைகள் என்பவற்றைப் பார்க்கின்ற போது தமிழ்த் தரப்பு பலமாக இருக்க வேண்டுமென்ற அவசியம் ஏற்படுகிறது.

குறிப்பாக ஐ.நா தீர்மானத்திலிருந்து விலகுகின்ற செயற்பாடுகள், பௌத்த சிங்கள ஆதிக்கம், சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாடாமல் விட்டமை, ஒற்றையாட்சி நாடு தான் என்று சுதந்திர தின உரையில் ஐனாதிபதி கூறியமை போன்ற விடயங்கள் எல்லாம் மற்றப் பக்கத்தில் மிகத் தீவிரமாக நடக்கிறது.

இவ்வாறான நிலைகள் இருக்கின்ற போது எங்கள் பக்கத்தில் இருக்கின்ற ஒற்றுமையீனத்தால் அதனை அரசாங்கம் மிக இலாபகமாக பாவிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே தான் பலமான கட்சியாக இருக்கின்ற கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென்று நாங்கள் கேட்கின்றோம்.

கேள்வி: ஒற்றுமை வலியுறுத்தப்படுகின்ற நிலைமையில் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் பிளவுகள் அல்லது புதிய அணிகளின் உருவாக்கம் என்பது எத்தகைய சாதக பாதக நிலைமைகளை ஏற்படுத்துமென்று கருதுகின்றீர்கள்?

பதில் – கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கின்ற சில பிளவுகள் நிச்சயமாக தேர்தல்களில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது கூட்டமைப்புக்கு வெளியில் இருக்கின்ற தரப்பினர் குறைந்த வாக்குகளையாவது எடுக்கின்ற போது அது கூட்டமைப்பிற்கு குறிப்பிட்டதொரு பாதிப்பை ஏற்படுத்தும்.

சில வேளைகளில் ஒன்றிரண்டு ஆசனங்கள் கூட கூட்டமைப்பிலிருந்து மாறிப் போவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இவை எல்லாம் தமிழினத்தின் விடுதலைக்கான பயணத்தின் தடைகளாகவே அமையும்.

குறிப்பாக தமிழ்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் அனைத்துடனும் பேச வேண்டுமென்று தான் இன்றைக்கு அரசாங்கம் சொல்லியிருக்கிறது. அதாவது கடந்த காலங்களில் பல தமிழ்க் கட்சிகள் பேசுகின்றபோது அதற்குள் இருக்கக் கூடிய குழப்பங்களை பார்த்திருக்கிறோம்.

அதிலும் குறிப்பாக பிரேமதாசா பதவிக்கு வந்த பின்னர் அனைத்துக் கட்சி கூட்டங்களைக் கூட்டியிருந்தார். அப்போது வெவ்வேறுபட்ட நிலைப்பாடுகளை தமிழ்க் கட்சிகள் கொண்டிருந்ததால் நீங்கள் எல்லாருமாகச் சேர்ந்திருந்து அமர்ந்து ஒருமித்து அல்லது ஒன்றாக ஒரு முடிவை எடுத்துக் கொண்டு வாருங்கள் அதன்பின் இதைப்பற்றிப் பேசலாம் என்று சொல்லும் நிலைமைகள் இருந்தன.

இவ்வாறான நிலைப்பாடுகள் எல்லாம் தோன்றுவதற்கு வாய்ப்பிருக்கின்ற காரணத்தினால் ஒற்றுமையின் அல்லது பலத்தின் தேவை கருதி மக்கள் செயற்படுவார்கள். இதனை தமிழ் மக்களும் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.

குறிப்பாக நீண்ட கால யுத்தங்கள் அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குப் பின்னரான இன்றைய நிலைமையில் மக்கள் சகலதையும் உணர்ந்தும் அறிந்தும் வைத்திருக்கின்றார்கள். ஆகையினால் காலத்தின் தேவை கருதி சரியான முடிவை மக்கள் எடுப்பார்கள் என்பதே என்னுடைய நம்பிக்கையாகவும் இருக்கின்றது.
கேள்வி: நீங்கள் குறிப்பிடுவது போன்று காலத்தின் தேவை கருதி ஒற்றுமை வலியுறுத்தப்பட்டாலும் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த முடியாமைக்கான காரணம் என்னவென்று கருதுகின்றீர்கள்?

பதில் – என்னுடைய அறிவிற்கு எட்டிய வகையில் ஒற்றுமையை எல்லாரும் வலியுறுத்தியும் நானா? நீயா ? என்ற ஈகோ தான் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த முடியாதமைக்கான மிக முக்கிய காரணமாக இருக்கின்றதென நினைக்கிறேன். மேலும் தனிப்பட்ட குரோதங்களும் வெறுப்புக்களும் காரணமாக இருக்கிறது.

அதாவது ஒருவரை ஒருவர் விமர்சிக்கின்ற தனிப்பட்ட வெறுப்புக்கள், குரோதங்கள் வளர்ந்துவிட்டதாலும் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த முடியாமல் இருக்கிறது.

இதற்கு மேலாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது நாங்கள் தான் என்பதை நிரூபிக்க வேண்டுமென்ற போக்குத் தான் இந்தப் பிரச்சினைக்கு காரணமாக இருக்கிறது. அவ்வாறான போட்டி அல்லது குரோதங்கள் இல்லையென்றால் ஒற்றுமைப்பட முடியும்.

கேள்வி – கூட்டமைப்பிற்கு எதிரான அல்லது மாற்றாக உருவாக்கப்படுகின்ற மாற்று அணி தொடர்பில் நீங்கள் கருதுவது என்ன?

பதில் – மாற்று அணி என்பது பலமான அணியாக அல்லது கூட்டமைப்பிற்கு மாற்றாக இருக்கக் கூடிய ஒரு அணியாக தமிழ் மக்கள் நிச்சயமாகப் பார்க்கவில்லை என்பதை அவர்களுடைய செயற்பாடுகள் நடவடிக்கைகளைப் பார்த்தால் தெளிவாகத் தெரிகின்றது.

குறிப்பாக இன்றைக்கு மாற்று தாங்களே என்று சொல்லிக் கொண்டிருக்கும் கNஐந்திரகுமார் பொன்னம்பலத்தைப் பார்த்தால் அவர் அன்று தொடக்கம் இன்றுவரை ஏதோ ஒன்றை வைத்து மற்றவரை எல்லாம் துரோகி துரோகி என்றும் அந்த ஏஜன்ட் இந்த ஏஜன்ட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர அவராக என்ன செய்தார் என்றால் எதுவுமே செய்யவில்லை. தமிழின விடுதலைக்காக அவர்கள் எதுவுமே செய்யவில்லை.

அதே போல விக்கினேஸ்வரன் அணியைப் பொறுத்தவரையில் வௌ;வேறுபட்ட காரணங்களால் கூட்டமைப்பிலிருந்த தனித்தனியாக விலகிச் சென்று இன்று கூட்டாக நின்று கொண்டு அவர்களும் தாங்கள் ஒரு கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற போதும் அதனையும் ஒரு மாற்றாக பார்க்க முடியாமல் இருக்கின்றது.

ஆகவே தான் எங்களைப் பொறுத்தவரையில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் நடவடிக்கைகளை மக்கள் ஆதரிக்கின்றனர். மக்களின் விடுதலையை நோக்கி கூட்டமைப்பு பலமாகச் செயற்படுவதால் தான் நாங்களும் கூட்டமைப்புடன் தொடர்ந்து செல்லுகின்றோம். ஆயினும் கூட்டமைப்பிலும் சில பிழைகள் குறைகள் இருக்கின்றன. அதை நாங்கள் மறுக்க முடியாது தான்.

ஆனாலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை அணுகுகின்றபோது நான் மேற்சொன்ன இந்த சில பிழைகள் எல்லாம் பெரிய பிழைகளாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை அல்ல ஏனென்றால் எங்களுடைய மக்களின் விடுதலை தான் முக்கியமாக இருக்கின்ற போது ஆசனங்களுக்கான பிரச்சினைகளை எல்லாம் பெரிய விடயமாகப் பார்த்துக் கொண்டிருந்தால் ஒரு கூட்டாக இயங்க முடியாது.

ஆகவே முக்கியமான நோக்கம் எது என்று பார்க்க வேண்டும். தமிழ் மக்களின் விடுதலை தான் முக்கியமான நோக்கமென்றால் அந்த நோக்கத்திற்காகத் தான் நாங்கள் கூட்டாக இருக்கின்றோம் என்பது முக்கியமான விடயம்.

கேள்வி: பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரைபு ஒற்றையாட்சியை அடிப்படையாகக் கொண்டது என்றும் அந்த ஒற்றையாட்சித் தீர்வுக்கு கூட்டமைப்பு இணங்கி விட்டது என்றும் கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறதே?

பதில்: – பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது இடைக்கால அறிக்கை என்று தான் இருக்கிறது. அதற்கு பின் இணைப்புக்களை எல்லாக் கட்சிகளும் போட்டிருக்கின்றன.

குறிப்பாக கூட்டமைப்பு கூட பின் இணைப்புக்களை போட்டிருக்கிறது. ஆகவே அந்த அறிக்கை தான் இறுதி முடிவாக வரப்போகின்றது என்பதல்ல. அது ஒரு விவாததத்திற்கான அறிக்கையாக வைக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் அந்தப் பின்குறிப்புக்கள் எல்லாம் சேர்த்து விவாதிக்கப்பட்டு முடிவாக வருகின்றது தான் ஒரு அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும் விடயங்களாக இருக்கும். இது முடிந்த கதை தான் இருந்தாலும் அதனைப் பற்றி சொல்லுகிறேன் இன்று இந்த அரசு இலங்கையிலும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலம் ஒற்றையாட்சி என்று தான் சொல்லி வருகிறது.

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை அப்படியானதாக ஒற்றையாட்சியாக இல்லை. ஆனால் கூட்டமைப்பின் மேல் குற்றத்தைப் போடுவதற்காக அதனை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கின்றனர். தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பாதையில் அது ஒரு நல்ல விசயமாக எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் நாங்கள் எல்லோருமாகவே ஒற்றுமையாக ஒற்றையாட்சியை ஏற்கவில்லை என்று நிற்க வேண்டுமென்பது தான் என்னுடைய அபிப்பிராயம்.

கேள்வி: அவ்வாறான குற்றச்சாட்டு கூட்டமைப்பின் மீது ஏன் முன்வைக்கப்படுவதாகக் கருதுகின்றீர்கள்?

பதில்: – கூட்டமைப்பிற்கு மாற்றாக இருக்கக் கூடிய மாற்றுக் கட்சிகள் தான் அந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. அதே நேரத்தில் அந்த இடைக்கால அறிக்கையில் ஒரு குழப்பமும் இருக்கிறது. அந்தக் குழப்பம் எங்களுக்கும் அதில் இருக்கிறது. அதாவது ஒருமித்த நாடு என்ற அந்த சொற்பதத்தில் தான் குழப்பம் இருப்பதாகவும் அது ஒற்றையாட்சி என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது தான் கட்டாயமாக இறுதி வடிவில் வரப் போறதில்லை என்பதை நாங்கள் பல தடவைகள் திரும்பத் திரும்ப கூறியிருக்கிறோம். இது ஆராயப்பட வேண்டிய ஒரு அடித்தளம். அதாவது அந்த இடைக்கால அறிக்கை என்பது ஆராயப்பட வேண்டியது.

கேள்வி: – கூட்டமைப்பு இழைத்த தவறினாலே மாற்று அணி உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாக மாற்று அணியினர் சொல்வதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: – கூட்டமைப்பின் தவறு என்பதைக் காட்டிலும் நிச்சயமாக கூட்டமைப்பிற்கும் அதிலே ஒரு பங்கு இருக்கிறது.

அதாவது மாற்று அணி ஒன்றை உருவாக்குவதில் கூட்டமைப்பிற்கும் பங்கு இருக்கிறது. இருந்தாலும் முதலமைச்சராக விக்கினேஸ்வரனைக் கொண்டு வருவதில் ஆரம்பத்தில் மாற்றுக் கருத்து இருந்தாலும் அது நிவர்த்தி செய்யப்பட்டு ஒருமித்துச் செயற்படுகின்ற நிலைமை இருந்தது.

ஆனால் கடந்த 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலே நானும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் அவரிடம் சென்று நீங்கள் கூட்டமைப்பினுடைய முதலமைச்சர், நீங்கள் நிச்சயமாக கூட்டமைப்பின் கூட்டங்களில் பேச வேண்டும் அல்லது அறிக்கையாவது விட வேண்டுமென்று வினயமாக அவரைக் கேட்டிருந்தோம். ஆனால் அவர் அதற்கு மறுத்து விட்டார். அதனால் அவர் அதனைச் செய்யவில்லை.

அது அவர் செய்த தவறு என்றே நான் இப்போது கருதுகின்றேன். ஏனென்றால் அவர் அதைச் செய்திருந்தால் எங்களுக்கு இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்கள் கூடக் கிடைத்திருக்கலாம்.

அவ்வாறு செய்யாதது அவருடைய சொந்த விருப்பமாகக் கூட இருக்கலாம். ஆனால் அவர் கூட்டமைப்பினுடைய முதலமைச்சராக இருந்து கொண்டு அப்படி எதனையும் செய்யாமல் இருந்தது தவறு.

பருத்தித்துறை விசேட நிரூபர்- எஸ்.நிதர்ஷன் (நன்றி தினகரன் வாரமஞ்சரி 23.02.2020)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More