192
நாங்கள் தொலைத்தது ஆடுகளையோ அல்லது மாடுகளையோ இல்லை. தொலைத்தது எங்களுடைய உயிர்களையும், பிள்ளைகளையுமே. எங்களுக்கான ஒரு நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம் என்பதனை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை (27) மதியம் மன்னாரில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னார் நீதிமன்றத்தில் கடந்த 25 ஆம் திகதி மன்னார் மனித புதை குழி தொடர்பாக இடம் பெற்ற வழக்கு விசாரனை காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வழக்கு விசாரணை இடம் பெற்றது.
இதன் போது மன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்றால் யார்? என்று கேட்டார்.
சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட நாங்கள் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.
மன்னார் மனித புதை குழி வழக்கு விசாரணைகள் கூட மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பெயரில் இடம் பெற்று வருகின்றது.குறிப்பாக எனது பெயரிலும் வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் குறித்த அரச சட்டத்தரணி என்ன நோக்கத்திற்காக இவ்வாறு கேட்டார் என்று தெரியாமல் இருக்கின்றது.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் 4 வருடங்களாக வீதியில் நின்று போராடிக்கொண்டு இருக்கின்றோம்.
எத்தனையோ போராட்டங்கள்,கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என பல்வேறு விதமாக நாங்கள் அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அரசியல் வாதிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என காட்டிக் கொண்டு இருக்கின்றோம்.
எங்களுடைய பிள்ளைகள் எங்கே என்று கேட்டுக்கொண்டு இருக்கின்றோம். அவ்வாறு இருக்கின்ற சமையத்தில் கூட மன்னார் நீதிமன்றத்தில் வைத்து கடந்த 25 ஆம் திகதி அரச சட்டத்தரணி ஒருவர் பாதிக்கப்பட்டவர்கள் யார்? என்று கேட்கின்றார்.
குறித்த சட்டத்தரணி இவ்வளவு காலமும் இலங்கையில் இருக்கவில்லையா? இலங்கையில் என்ன நடக்கின்றது என்று இவருக்கு தெரியாதா?காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான அம்மாக்களான நாங்கள் ஆயிரக்கணக்கான நாட்கள் வீதியில் நின்று போராடிக் கொண்டு இருக்கின்றோம்.
மனிதாபிமானம் இல்லாமால் அவர் கேட்கின்றார் பாதிக்கப்பட்டவர்கள் யார்? என்று. எங்களுடைய பிள்ளைகளை அரசாங்கம் பிடித்துக்கொண்டு போனது என்று நாங்கள் எவ்வாறு தெரியப்படுத்த முடியும்.?
குறித்த அரச சட்டத்தரணியின் கருத்து எமக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.மன்னார் மனித எலும்புகூடு வழக்கு விசாரணை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என சுமார் 345 ற்கும் மேற்பட்டவர்களின் விபரங்கள் பதியப்பட்டுள்ளது.அவற்றில் 13 பேரின் வழக்கு விசாரணைகளும் மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்று வருகின்றது.
மேலும் காணாமல் போனவர்கள் தொடர்பாக மண்ணை தோண்டி பாரூங்கள் என்று அரச தரப்பில் சிலர் தெரிவிக்கின்றனர்.
எங்கள் பிள்ளைகளை நாங்கள் மண்ணுக்கா கொடுத்தோம்.?எங்கள் பிள்ளைகளை எங்களின் கண் முன் உயிரோடு பிடித்துக் கொண்டு சென்றார்கள்.அப்போது நாங்கள் எவ்வாறு மண்ணை தோண்டி பார்க்க முடியும்.
உரிய தரப்பினர் வந்து எங்களிடம் சொல்லட்டும்.எங்களின் பிள்ளைகளை அடித்தோம்,கொன்றோம்,மண்ணில் பிதைத்தோம் என்று.அப்பேதாவது எங்களின் பிள்ளைகளின் எலும்புகள் இது தான் என்று எடுப்போம்.அதற்கு பின்னர் விவாதிப்போம். மனச்சாட்சி இல்லாமல் மண்ணை தோண்டி பாருங்கள் என்று கூறுகின்றனர்.
இவர்கள் இவ்வாறு கதைக்க கதைக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான எங்களுக்கு வேதனையாக உள்ளது. நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம்.இழப்பதற்கு இனி ஒன்றுமே எங்களிடம் இல்லை.
நாங்கள் தொலைத்தது ஆடுகளையோ அல்லது மாடுகளையோ இல்லை.தொலைத்தது எங்களுடைய உயிர்களையும், பிள்ளைகளையுமே.அப்படி என்றால் நாங்கள் தேடத்தான் செய்வோம்.
எங்களுக்கான ஒரு நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம் என்பதனை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம்#நீதி #காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு #மன்னார் #மனிதபுதைகுழி
Spread the love