அமெரிக்காவின் மிலேனியம் சலேஞ்ச் கோர்ப்பரேஷன் ((Millennium Challenge Corporation – MCC) நிறுவனத்துடன், இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடவிருந்த ஒப்பந்தத்தில், இனி கையொப்பமிடப் போவதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நேற்றையதினம் (27) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இந்த ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கைபயின் பிரகாரமே இந்தத் தீர்மானத்துக்கு அரசாங்கம் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த ஒப்பந்தத்தினூடாக, மீளப் பெறப்படாத வகையில், 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (85 பில்லியன் ரூபாய்) நிதி உதவி கிடைக்கப்பெற இருந்ததாகவும் இது, 447.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியாகவும் 32.5 மில்லியன் டொலர்கள் சேவையாகவும் வழங்கப்படவிருந்தன.
இந்த நிதியுதவியானது, பிரதான இரு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே வழங்கப்படவிருந்த போதிலும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு பொருளாதாரச் சுதந்திரம், நியாயமான நிர்வாகம், பொதுமக்களுக்கான முதலீடுகள் போன்ற சில நிபந்தனைகள் உள்ளதனால் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதால், இலங்கையின் இறையாண்மைக்குப் பிரச்சினைகள் ஏற்படுவதாக இது பற்றி ஆராய்ந்த குழு, தனது இடைக்கால அறிக்கையில், சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கம் முடிவெடுத்துள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் #மிலேனியம் #ஒப்பந்தம் #கையொப்பம் #பந்துலகுணவர்தன