180
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பெரியமடு கிராமத்தில் கடமையாற்றிய கிராம அலுவலகரான எஸ்.லுமாசிறி என்பவர் ஒரே நாளில் அரசியல் அழுத்தத்தின் காரணமாக அவசரமாக கோவில் குளம் கிராமத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முந்தினம் வியாழக்கிழமை(27) திகதியிடப்பட்ட கடிதமொன்றின் மூலம் புதிய பிரிவிற்கு கடமைக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளார். ஓரிரு தினங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் இந்த திடீர் இடமாற்றம் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மிகவும் துடிப்பாகவும் சிறப்பாகவும் கடமையாற்றி வந்த வினைத்திறன் மிக்க கிராமசேவகர் என அந்த கிராம மக்களிடம் நற்பெயரைப் பெற்ற கிராம அலுவலகர் மாற்றப்பட்டதன் பின்னணியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழுத்தம் இடம் பெற்றது தெரியவந்துள்ளது.
குறித்த கிராமத்தில் குறித்த அரசியல்வாதியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட சிலரின் போலி வாக்குப் பதிவுகளை நீக்கி தேர்தல் சட்டங்களை சரியாக நடை முறைப்படுத்தி தனக்கு கிடைக்கவிருந்த பல முறையற்ற கள்ள வாக்குகளை இல்லாமல் செய்தார் என்ற காரணத்தினால் குறித்த கிராம அலுவலகரை மாவட்ட செயலகமூடாக அறிவுறுத்தப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ள நிலையில் வேண்டுமென்றே ஒரேநாளில் இடமாற்றத்துக்கான ஆணை வழங்குவது ஒரு பழிவாங்கும் நடவடிக்ககை என்பதனால் சில ஜனநாயக விரும்பிகள் இந்த பிரச்சனையைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. #பெரியமடு #கிராமஅலுவலகர் #இடமாற்றம்.
Spread the love