தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு எதிர் மனுதாரரின் சமர்ப்பணத்துக்காக வரும் மார்ச் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வின் முன் இந்த மனு இன்று மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.
எதிர் மனுதாரரான யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் வி.மணிவண்ணனின் தரப்பில் சட்டத்தரணிகள் காண்டீபன், ஜூட் டினேஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் மூத்த சட்டத்தரணி வியித் சிங், முன்னிலையானார்.
மனுதாரரின் சமர்ப்பணத்தையடுத்து எதிர்மனுதாரரின் சமர்ப்பணத்துக்காக மனு எதிர்வரும் 11ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்க கட்டளையிடுமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் பாசையூரைச் சேர்ந்த ஒருவரால் 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தெரிவத்தாட்சி அலுவலகர் உள்ளிட்டோரும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் நிரந்தரமாக வதியாத ஒருவர் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சி தேர்தல் விதியை மீறும் செயல் என மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி கட்டளையிடவேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார்.
இந்த நிலையில் மனுதாரரின் நிவாரணங்களில் ஒன்றான யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினர் வி.மணிவண்ணன் சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கும் வாக்களிப்பதற்கும் இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றால் 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கட்டளை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது #தமிழ்தேசியமக்கள்முன்னணி #மணிவண்ணன் #வழக்கு #ஒத்திவைப்பு #மாநகரசபை