வல்வெட்டித்துறை ஆதி கோவிலுக்கு அண்மையாகவுள்ள பூங்காவில் நிலத்தினை தோண்டி தேடுதலை மேற்கொண்டிருந்த 3 தமிழ் காவற்துறை உத்தியோகத்தர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த காவற்துறை உத்தியோகத்தர்கள் மூவரையும் வல்வெட்டித்துறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவல் நிலைய பொறுப்பதிகாரி, சட்டத்துக்கு புறம்பாக தேடுதலை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்குட்படுத்தியுள்ளார்.
குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வல்வெட்டித்துறை ஆதி கோவிலுக்கு அண்மையாகவுள்ள பூங்கா வளாகத்துக்குள் பெருமளவு கஞ்சா போதைப்பொருள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை சிரேஸ்ட்ட காவற்துறை அத்தியட்சகரின் கீழான சிறப்புப் காவற்துறை பிரிவின் உத்தியோகத்தர் உள்பட 3 காவல் உத்தியோகத்தர்களுக்கும் தகவல் கிடைத்துள்ளது.
தகவலை அடுத்து குறித்த காவற்துறை உத்தியோகஸ்தர்கள் தமது பொறுப்பதிகாரிக்கு அது தொடர்பில் தெரியப்படுத்தி உரிய அனுமதிகள் பெறமால், சந்தேகத்துக்கிடமான நிலப்பகுதியை இரும்புக் கம்பிகளால் குத்தி தேடுதலை மேற்கொண்டிருந்தனர்.
அதனை அறிந்த வல்வெட்டித்துறை காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி, சம்பவ இடத்துக்கு சென்று 3 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.
உரிய அனுமதியின்றி சட்டத்துக்குப் புறம்பாக நிலத்தை அகழ்ந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 3 காவற்துறை உத்தியோகத்தர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் எச்சரிக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.