எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் 4 வர்த்தமானி அறிவிப்புக்கள் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் இடங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் போட்டியிடவேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சுயேட்சை வேட்பாளர் குழுவினால் செலுத்தப்படவேண்டிய கட்டுப்பணம் குறித்தும் மற்றுமொரு வர்த்தமானி அறிவிப்பும் வெளியிட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் பணி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, சகல மாவட்ட செயலாளர்கள், பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் திட்டமிடல் பிரிவுப் பணிப்பாளர் சன்ன சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் கடந்த திங்கட் கிழமை நள்ளிரவு கலைக்கப்பட்டமைக்கு அமைவாக வேட்பு மனுக்கள் மார்ச் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் பொறுப்பேற்கப்படவுள்ளதுடன் பொது தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. #பொதுத்தேர்தல் #வர்த்தமானி #அறிவிப்புக்கள்