(க.கிஷாந்தன்)
குன்றும்,குழியுமாகக் காணப்படும் பண்டாரவளை – அட்டம்பிட்டிய வீதியை விரைவாக புனரமைத்துதருமாறு வலியுறுத்தி பண்டாரவளை சுற்றுவட்டத்தில் (06.03.2020) அன்று சாலை மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அட்டம்பிட்டியவிலிருந்து கறுப்புக்கொடிகளை ஏந்தியவாறு வாகனங்களில் பேரணியாக வந்த அட்டம்பிட்டிய பகுதி மக்கள், பதுளை, கொழும்பு வீதியை இடைமறித்தே கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அட்டம்பிட்டியவிலிருந்து, பண்டாரவளை வரையான சுமார் 15 கிலோமீற்றர் பாதை கடந்த ஏழு வருடங்களாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.
உரிய திட்டமிடல் இன்றி, ஆங்காங்கே புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதால் இவ்வழி ஊடாக பயணம் செய்யும் பயணிகள், பாடசாலை மாணவர்கள். நோயாளிகள் என பலரும் தினமும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பதாக போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பில் உயர் அதிகாரிகளிடம் பல தடவைகள் எடுத்துரைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டும் மக்கள், இவ்வீதியானது குன்றும், குழியுமாக காணப்படுவதால் மழைக்காலங்களில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே செல்லவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.
சுமார் 5 மணிநேரம் வரை போராட்டம் தொடர்ந்தது.பின்னர் காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர். கலைந்து செல்லுமாறு போராட்டக்காரர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்தபோதிலும், அதனை ஏற்க மறுத்தனர். இதனால், காவல்துறையினருக்கும், மக்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இறுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த, குறித்த வீதியை புனரமைக்கும் குழுவிலுள்ள பொறியியலாளர் ஒருவர், மக்களின் கோரிக்கைகளுள் சிலவற்றை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். #பண்டாரவளை #சாலைமறியல் #போராட்டம் #கறுப்புக்கொடி