ஐக்கிய நாடுகள் சபை என்பது அரசுகளின் அரங்கம். ஆனால் இந்த உலகம் அரசுகளால் மட்டும் ஆனதல்ல. அரசுகளுக்கும் வெளியே மிகப்பெரிய பொதுசனத் தளம் ஒன்று உண்டு. அதற்குள் மத நிறுவனங்கள் ஊடகங்கள் படைப்பாளிகள் துருத்திக்கொண்டு தெரியும் முக்கிய ஆளுமைகள் பொது நிறுவனங்கள் சிவில் நிறுவனங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் கருத்துருவாக்கிகள் ஆய்வு நிறுவனங்கள் கொள்கை ஆய்வு நிறுவனங்கள் போன்ற அனைத்தும் இந்தப் பெரும்பரப்பிற்குள் அடங்கும்.அரசுகளை தெரிந்தெடுப்பதற்கு வேண்டிய பொதுசன அபிப்பிராயத்தை இப்பொது சனப் பரப்ப்பே உருவாக்குகின்றது.
இப்பெரும் பகுதிக்குள் ஈழத்தமிழர்கள் ஓரளவுக்கு செய்யப்பட்டிருக்கிறார்கள் .குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் இப் பொது சனப் பரப்புக்குள் கடந்த 10 ஆண்டுகளாக ஓய்வின்றி சொற்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாகவே ஜஸ்மின் சூக்கா ,கொலம் மக்ரே போன்ற மகத்தான நண்பர்களை சம்பாதித்திருருக்கிறார்கள். இது காரணமாக ஈழத்தமிழர்களுக்கு அநீதி இழைக்கப் ப்பட்டிருக்கிறது என்ற ஒரு உலகப் பொது அபிப்பிராயத்தை படிப்படியாக கட்டியெழுப்பி வருகிறார்கள். ஆனால் இந்த அபிப்பிராயம் ஆனது மேலும் திரட்ச்சியுற வேண்டியும் பலமடைய வேண்டியும் உள்ளது. இப்பொது அபிப்பிராயம் அரசுகளின் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஒன்றாகவும் அரசுகளின் மீது அழுத்தத்தை கொடுக்கக்கூடிய ஒன்றாகவும் இனிமேல்தான் மாற வேண்டி இருக்கிறது. அப்பொழுதுதான் அது அரசுகளின் தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்தும். அரசுகளின் தீர்மானம்தான் ஐநாவில் நிறைவேற்றப்படும். அரசுகள் முடிவெடுத்தாற்றான் ஈழத் தமிழர்களின் விவகாரத்தில் அடுத்தடுத்த கட்டத்துக்கு போக முடியும.
ரோகியன்கா முஸ்லிம் மக்களின் விவகாரத்தில் சிறிய கம்பியா தலையிட்டது. அது ஒரு முஸ்லீம் நாடு அதன் 95 வீதமான தொகையினர் முஸ்லிம்கள.; எனவே மதரீதியிலான சகோதரத்துவம் காரணமாக சிறிய நாடு ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஆதரவாக அனைத்துலக கிரிமினல் நீதிமன்றத்தில் விவகாரத்தைக் எடுத்துச் சென்றிருக்கிறது இது விடயத்தில் அந்த நாடு வெற்றி பெறும் இல்லையோ இது ஒரு முக்கியமான அடி வைப்பு.
கம்பியா போல நட்பு நாடுகள் ஈழத் தமிழ் மக்களுக்கும் தேவை. நாடுகளின் அரசியல் தீர்மானம்தான் ஐநாவில் அதிகம் செல்லுபடியாகும் எனவே ஈழத் தமிழ் மக்கள் நட்பு நாடுகளை வென்றெடுக்க வேண்டும். அதற்கு வேண்டியா லொபியைச் செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அந்த வேலையை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் செய்து வருகின்றன. அவர்களால் தான் அதைச் செய்யவும் முடியும். ஏனெனில் அது அவர்களுடைய களம். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பதனை எப்படி செய்ய வேண்டும் என்பதனை ஒருங்கிணைத்து முடிவெடுக்க வேண்டியது தாயகமே. தாயகம் தான் மையம். அங்கிருந்துதான் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அந்த முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தையும் டயஸ்பொறாவையும் ஒருங்கிணைத்து அனைத்துலக சமூகத்தையும் வெற்றிகரமாக கையாளலாம்.
ஆனால் அவ்வாறு கையாளத் தேவையான ஒரு கட்டமைப்பு தாயகத்தை மையமாகக் கொண்டு இன்றுவரையிலும் உருவாக்கப்படவில்லை. மாறாக புலம்பெயர்ந்த தமிழ் தரப்பிடம் தான் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு தலைகீழ் பொறிமுறை. தாயகத்தில் பொருத்தமான ஒரு கட்டமைப்பு இல்லாத வெற்றிடத்தில் தான் இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் அதிக அளவு பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது .ஆனால் அவர்களால் ஒரு கட்டத்துக்கு மேல் போக முடியாது.
2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பொழுது புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருத்து பரவலாக காணப்பட்டது. போராட்டத்தை ஒரு அஞ்சலோட்டமாக எடுத்துக்கொண்டால் அஞ்சலோட்டக் கோல் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடம் ஒப்படைக்க பட்டிருப்பதாக அப்பொழுது கருதப்பட்டது. அவ்வாறு கருதத் தக்க விதத்தில் தமிழ் டயஸ்பொறாவின் செயற்பாடுகளும் அமைந்திருந்தன. அவ்வாறு கருதத் தக்க விதத்தில் தாயகத்தில் நிலைமைகளும் காணப்பட்டன. தாயகத்தில் வாழ்ந்த அரசியல் செயற்பாட்டாளர்களும் கட்சிகளும் அச்சத்தில் வாழ வேண்டியிருந்தது. ஒரு கொடுமையான தோல்வி, அவமானம், கூட்டுக் துக்கம் என்பவற்றின் விளைவாக சமூகம் பெருமளவுக்கு முடங்கிப் போயிருந்த ஒரு காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களே கூட்டுத் தோல்விக்கு எதிராகவும் கூட்டு காயங்களுக்கு எதிராகவும் கூட்டு மனவடுக்களுக்கு எதிராகவும் கூட்டுக் அவமானங்களுக்கு எதிராகவும் போராடக்கூடியவர்களாகக் காணப்படடார்கள்.
தாயகத்தை நோக்கிய பிரிவேக்கத்தோடு ஆற்றாமையோடு தோல்வியை ஏற்றுக் கொள்ள மறுத்து புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் கணிசமான பகுதி திரண்டு எழுந்தது. இது காரணமாக அஞ்சல் ஒட்டக்கோல் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக கருதியது சரியாக தோன்றியது.
இக்காலகட்டத்தில்தான் ஐநா வை நோக்கி தமிழ்ச்சமூகம் திரும்பியது. 2009 க்கு பின்னரான அரசியல் எனப்படுவது வீரமும் தியாகமும் மிக்க ஒரு விடுதலைப் போராட்டம் என்பதை விடவும் ஒரு போராட்டம் நசுக்கப்பட்ட பொழுது ஏற்பட்ட பேரழிவுக்கு எதிராக இனப்படுகொலைக்கு எதிராக நீதி கேட்கும் ஒரு போராட்டமாக மாறியது. இப்போராட்டத்தை 2009க்கு பின் உடனடியாக முன்னெடுத்தது தமிழ் டயஸ்போறாதான். ஈழத்தமிழ் விவகாரம் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு எடுத்துச் செல்லப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணம். அதன் விளைவாகத்தான் ஈழத்தமிழர்களுக்கு இனப்படுகொலை நடந்திருக்கிறது என்ற ஓர் அபிப்பிராயம் உலகப் பரப்பில் முன்னரை விட அதிகமாக பரப்பப்பட்டது.
எனினும் கடந்த பத்தாண்டு கால முயற்சிகள் போதிய வெற்றி பெறத் தவறிவிட்டன. அதன் விளைவாகத்தான் புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிகளவில் கேட்ட பரிகார நீதிக்கு பதிலாக நிலைமாறு கால நீதி ஐநா மன்றத்தால் வழங்கப்பட்டது. புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பெரும்பகுதி உலக மன்றத்திடம் கேட்டது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை. ஆனால் உலக சமூகம் வழங்கியது நிலைமாறுகால நீதியை. நிலைமாறுகால நீதி எனப்படுவது தமிழ் மக்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட ஒன்று அல்ல அது போரினால் பாதிக்கப்பட்ட மூன்று சமூகங்களுக்கும் உரியது. அங்கே இனப்பிரச்சினைக்கான தீர்வு எனப்படுவது பல்வேறு விடயங்களில் ஒன்றாக மாற்றப்பட்டு விட்டது. ஜ.நா.த்தீர்மானங்களில் தமிழ் என்ற வார்தையே இல்லை.அவ்வாறு இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றை பெறுவதற்காக சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே ஓர் உடன்படிக்கையை எழுத வேண்டிய தேவையை நிலைமாறுகால நீதி வற்புறுத்தவில்லை.
போரில் வென்ற தரப்புக்கும் தோல்வியுற்ற தரப்புக்கும் இடையிலான வலுச் க்சமநிலையின் மீது வாக்களிக்கப்பட்டதே நிலைமாறுகால நீதியாகும. தோல்வியை ஏற்றுக் கொள்ள மறுத்த புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் பரிகார நீதியைக் கேட்டுப் போராடியது. ஆனால் உலக சமூகம் அவர்களுக்கு வாக்குறுதியளித்தது நிலைமாறுகால நீதியை.
இதுவிடயத்தில் கடந்த 10 ஆண்டுகளாக குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஒரு கட்டத்துக்கு மேல் முன்னேற முடியவில்லை. இதற்கு அடிப்படையாக மூன்று காரணங்கள் உண்டு.
முதலாவது காரணம் இது ஒரு தலைகீழ் பொறிமுறையாக இருப்பது. தாயகம் தான் மையமாக இருக்கவேண்டும். மாறாக புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் மையமாகக் காணப்படுகிறது.
இரண்டாவது காரணம் தாயகத்தில் ஒரு பலமான கட்டமைப்பு இல்லை என்பது மட்டுமல்ல இங்கு மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட கூட்டமைப்பு நிலைமாறுகால நீதியை ஏற்றுக்கொண்டது. அந்த நீதியை ஏற்றுக்கொண்டு ஐநாவின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை புரிந்த ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை கூட்டமைப்பு பாதுகாத்தது. தீர்மானத்தின் பிரகாரம் நிலைமாறுகால நீதியை ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கட்டியெழுப்பத் தவறிய போது ஐநா வழங்கிய இரண்டு கால நீடிப்புக்களை கூட்டமைப்பு ஆதரித்தது. அதாவது கூட்டமைப்பு நிலைமாறுகால நீதியை ஆதரித்தது.
ஆனால் புலம்பெயர்ந்த தமிழ் மக்களில் ஒரு பகுதி பரிகார நீதியை கேட்டது. இன்னொரு பகுதி நிலைமாறுகால நீதியை ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஐநாவுக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழ் தரப்பு இரண்டாக நின்றது. ஒருமித்த நிகழ்ச்சி நிரலின் கீழ் அதைக் கையாள முடியவில்லை. தாயகத்தில் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட கட்சியானது நிலைமாறுகால நீதியை ஆதரித்தது மக்கள் ஆணை அந்தக் கட்சிக்குத்தான் உண்டு. எனவே உலகம் சமூகம் அந்த கட்சி சொல்வதைத்தான் கேட்கும்.
இவ்வாறு தாயகத்தில் கூட்டமைப்பு நிலைமாறு கால நீதியை ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல தமிழகத்தையும் டயஸ்போறாவையும் இணைந்து ஓர் ஒருங்கிணைந்த கட்டமைப்பை ஏற்படுத்தி ஓர் ஒருங்கிணைந்த செயற்பாட்டை முன்னெடுக்க அக்கட்சி முயலவில்லை .அல்லது அதற்கு வேண்டிய அரசியல் தரிசனம் கட்சியிடம் இருக்கவில்லை. இது மூன்றாவது காரணம். இம்மூன்று காரணங்களினாலும் ஐ.நா.வையும் உலக சமூகத்தையும் உரிய முறைப்படி அணுக முடியவில்லை. கையாள முடியவில்லை.
ஐயாவை கையாள்வது என்பது ஐநாவுக்கு வரும் நாடுகளின் பிரதிநிதிகளை கையாள்வது அல்ல. நாடுகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளை வெளிப்படுத்துகின்றவர்கள் மட்டும்தான். அவர்கள் முடிவுகளை எடுப்பதில்லை. முடிவுகள் அவர்களுடைய நாடுகளின் தலைநகரங்களில் எடுக்கப்படுகின்றன. முடிவுகள் நிச்சயமாக மனிதாபிமான முடிவுகள் அல்ல. அல்லது நீதியின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளும் அல்ல. அவை பெரும்பாலும் அரசுகளுக்கும் அரசுகளுக்கும் இடையிலான உறவுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் அரசுத் தீர்மானங்கள் ஆகும். தீர்மானங்களை அந்த அரசுகளை ஐநாவில் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் மாற்ற முடியாது.
எனவே எங்கு லொபி செய்யப்பட வேண்டுமோ அங்கே அது குறைந்த அளவுக்கே செய்யப்பட்டிருக்கிறது. ஏனெனில் அதை ஓர் ஒருங்கிணைந்த செயற்பாடாக முன்னெடுப்பதற்கு தாயகம்-தமிழகம்-டயஸ்போரா ஆகிய மூன்று தொகுதிகளையும் ஒருங்கிணைத்;த கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக உலக சமூகத்தை கையாள்வதில் இருக்கும் பிரச்சினை இதுதான். இப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது?
ஒரே வழிதான் உண்டு. தாயகத்தில் ஒரு மக்கள் இயக்கத்தை கட்டி எழுப்பி அதன்மூலம் ஒரு மையக் கட்டமைப்பை உருவாக்கலாம். அல்லது தேர்தலில் பலமான மக்கள் ஆணையைப் பெறும் ஒரு கட்சி அல்லது கூட்டு அப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கலாம். அப்படி என்றால் உலக சமூகத்தை கையாளப் போகிறோம் புவிசார் அரசியலைக் கையாளப் போகிறோம் பூகோள அரசியலை கையாளப் போகிறோம் என்று கூறும் தரப்புக்கள் ஒரு பலமான மக்கள் ஆணையை பெறவேண்டும். வரவிருக்கும் தேர்தலில் அப்படி மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு கட்சி அல்லது கூட்டு ஒன்றிணைந்த ஒரு வேலைத் திட்டத்தை முன்வைத்து உரிய வழி வரைபடத்தின் படி உலக சமூகத்தை கையாளலாம.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. அடுத்த பொதுத் தேர்தல் விரைவில் நடக்கும். அதில் மேற்கூறிவாறான மக்கள் ஆணையை பெறுவதற்கு மாற்று அணிக் கட்சிகள் தயாரா?
இல்லை என்பதே தமிழ் மக்களின் துயரம். வரவிருக்கும் தேர்தலில் தமிழ் தரப்பு மூன்றுக்கு மேற்பட்ட கூறுகளாகப் பிளவுபட்டு தேர்தலில் போட்டியிடப் போகிறது. இதனால் தமிழ் வாக்குகள் மேலும் சிதறடிக்கப்படும். இப்படி தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு கூடாது என்று கேட்டு கடந்த ஜந்து ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை பல்வேறு தரப்புகளும் முன்னெடுத்தன. ஆனால் ஐக்கியத்தை ஏற்படுத்தும் தரப்புக்கள் வெற்றி பெற முடியாத அளவுக்குத்தான் தமிழ் அரசியல் சூழல் காணப்படுகிறது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது யாழ்ப்பாணம் திருமறைக் கலா மன்றத்தின் ஒரு கட்டடத்தில் தமிழ் சிவில் சமூக அமையம் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்தது. அதில் நான் உரையாற்றினேன். தமிழ் மக்களின் ஆகப்பெரிய ஆணையை பெற்ற ஒரு கட்டமைப்பால் தான் வெளி உலகத்தை வெற்றிகரமாக கையாள முடியும். தமிழ் அரசியலை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்று கூறினேன். ஆனால் அதற்குரிய வாய்ப்புகள் அருகில் செல்வதையும் சுட்டிக்காட்டினேன். அப்பொழுது அச்சந்திப்பில் கலந்துகொண்ட யாழ் பல்கலைக்கழக புலமைசாரா ஊழியர்களின் சங்கப் பிரதிநிதி ஒருவர் பின்வருமாறு சொன்னார் ‘அவர்களை அவர்களுடைய போக்கில் விடுவோம். அவர்கள் தேர்தலை எதிர்கொள்ளட்டும். அதில் வெல்பவர்கள் வென்று தோற்றவர்கள் தோற்கட்டும். அதற்குப் பிறகு தங்களுக்கு கிடைத்த வெற்றி தோல்விகளின் அடிப்படையில் அவர்கள் சிந்திப்பார்கள். அப்பொழுது நாங்களும் நடைமுறைச் சாத்தியமான ஐக்கியத்தை பற்றி யோசிக்கலாம்’ என்று. அப்படி என்றால் அடுத்த தேர்தல் வரை தமிழ் மக்கள் பொறுத்திருக்க வேண்டுமா? அடுத்த ஐந்தாண்டுகளிலாவது ஒரு பலமான வெளியுறவுக் கட் டமைப்பு உருவாக்கப்படுமா?