Home இலங்கை கொரோனா அச்சம்; ஆளின்றி மிதந்த படகுகள்:

கொரோனா அச்சம்; ஆளின்றி மிதந்த படகுகள்:

by admin


உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று அச்சத்துக்கு மத்தியில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நடந்து முடிந்தது.

வெள்ளிக்கிழமை (06) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா சனிக்கிழமை காலை யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்க ஆகியோரின் கூட்டுத் திருப்பலியுடன் நிறைவுக்கு வந்தது.

யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் தமிழிலும், காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்க சிங்களத்திலும் திருவிழா திருப்பலியை நடத்தினர்.

கொரோனா வைரஸ் அச்சத்துக்கு மத்தியில் வழமை போல அதிகளவான பக்தர்கள் பங்கேற்றனர். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 72 விசைப்படகுகள் மற்றும் 22 நாட்டுப் படகுகளில் 2,570 பக்தர்கள் கச்ச தீவு வந்திருந்தனர்.

திருவிழாவின் பின்னர் கருத்து வெளியிட்ட கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, சுமார் 9000 பக்தர்கள் இம்முறை திருவிழாவில் பங்கேற்றததாக கூறினார்.

ராமேஸ்வரம் – கச்சத் தீவு இடையே உள்ள கடல் பகுதியில் இந்திய கடலோரக் காவல் படை, கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுவினரும், இலங்கை கடற்படை, கடலோரக் காவல் படை கப்பல்களும் சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

முன்னதாக வெள்ளிக்கிழமை காலை முதல், மன்னார், யாழ்ப்பாணம், நெடுந்தீவு மற்றும் கொழும்பிலிருந்து ஏராளமான பக்தர்கள் படகுகள் மூலம் கச்ச தீவு வந்திருந்தனர். இதையடுத்து அன்று மாலை கச்சதீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெடுந்தீவு பங்குத் தந்தை எமில் பவுல் அந்தோணியார் உருவம் பொறித்த கொடியை ஏற்றினார்.

அதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த 14 சிலுவைகள் வழியாகச் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து திருப்பலியும் புனித அந்தோணியாரின் தேர்ப்பவனியும் நடைபெற்றன. இலங்கை கடற்படை வீரர்கள் அந்தோணியார் ரதத்தை தூக்கியபடி ஆலயத்தை வலம் வந்தனர்.

சனிக்கிழமை இடம்பெற்ற திருவிழா திருப்பலியை தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம் நடந்தது. இதையடுத்து திருவிழா கொடி இறக்கப்பட்டதுடன் திருவிழா நிறைவு பெற்றது.

இவ்விழாவில், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, முப்படைகளின் முன்னாள் தளபதி ரியல் அட்மிரல் ரவிந்திர விஜயகுணவர்தன, சிவகங்கை குருமுதல்வர் லூர்து ராஜா, யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதர் பாலச்சந்திரன், யாழ்ப்பாணம் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், மாவட்ட செயலாளர் மகேஷ்வரன், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

கச்சதீவு திருவிழாவில் கூடும் பக்தர்களிடையே கொரானோ வைரஸ் பரவும் என அச்சம் நிலவியதால், ஏற்கெனவே கச்சதீவு செல்ல பதிவு செய்திருந்த இந்திய பக்தர்களில் 500க்கும் மேற்பட்டோர் தங்கள் பயணத்தை இரத்து செய்தனர்.

கச்சதீவில் இருந்து ராமேஸ்வரம் திரும்பிய பக்தர்களுக்கு கொரானோ பாதிப்பு ஏற்படாமல் இருக்க மருத்துவத் துறையின் சார்பில் கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி அளிக்கப்பட்டது.
இதனிடையே இந்திய கடல் பகுதியில் சில பைபர் படகுகள் ஆட்கள் இன்றி இயந்திரத்துடன் மிதந்துள்ளன. இதைக் கண்ட கடலோரக் காவல் படையினர் மண்டபம் கடலோரக் காவல் படை நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அது கச்சதீவில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கை பக்தர்களின் படகுகள் எனவும், அவை காற்றின் வேகத்தில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதும் தெரியவந்தது.

பின்னர், மண்டபம் கடலோரக் காவல் படை நிலையத்தில் இருந்து சென்ற ரோந்து கப்பல், இந்திய கடல் பகுதிக்குள் வந்த 7 படகுகளை மீட்டு இந்திய கடலோரக் காவல்படையினர், இலங்கைக் கடற்படையினர் வசம் ஒப்படைத்தனர்.

கச்சதீவிலிருந்து ஜே.ஏ.ஜோர்ஜ் – தமிழ் மிரர்…

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More