யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போர் கிரிக்கெட் சமரின் 114 ஆவது போட்டி கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 114 ஆவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற ஜொனியன்ஸ் அணி தலைவர் நாகேந்திரராஜா சௌமியன் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
அதற்கிணங்க களமிறங்கிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தொடக்கத்தில் நிகழ்த்தப்பட்ட 3 ரன் அவுட்கள் என தடுமாறி 57.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது. எஸ்.சாரங்கன் 25, வி.விஜஸ்காந்த் 30, சஞ்சயன் 20, ஏ.நிதுசன் 20 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் கே.கரிசன் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், யோ.விதுசன் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்குத் தமது முதலாவது இனிங்ஸினை ஆட ஆரம்பித்த சென்.ஜோன்ஸ் ஏ.சுகேதனின் 49 ஓட்டங்களின் உதவியுடன் முதல்நாள் ஆட்டம் முடியும் போது 3 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் 27 ஓட்டங்களுடன் வினோஜன் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய தெ.டினோசன் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் கே.சபேசன் 43 , ஏ.அபிசேக் 25, எஸ்.அன்ரன் 24, எஸ்.பிரணவன 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் தீ.விதுசன் 5 விக்கெட்களையும், வி.விஜஸ்காந்த் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
141 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இனிங்ஸினை ஆரம்பித்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இரண்டாம் நாள் முடிவின் போது 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்தது. களத்தில் சஞ்சயன் 15, இந்துஜன் 13 ஓட்டங்களுடன் இருந்தனர்.
3 ஆவது நாள் ஆட்டம் தொடங்கியதும் சிறப்பாக விளையாடிய இந்துஜன் அரைச்சதம் கடந்தார். இந்துஜன் 56 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்துஜன் ஆட்டமிழக்கும் போது யாழ்ப்பாணம் மத்திய 108 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அதன்பின்னர் விக்கெட்கள் மளமளவென வீழ்த்தப்பட்டன. மறுமுனையில் பொறுப்புடன் நின்ற சஞ்சயனும் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 45.4 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்து இனிங்ஸ் மற்றும் 17 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
பந்துவீச்சில் ஜொனியன்ஸ் அணி சார்பாக அன்ரன் சரண் 32 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும், யோகதாஸ் விதுசன் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
சென்.ஜோன்ஸ் அணியின் அன்ரன் சரண்ராஜ் ஆட்டநாயகனாயும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் பி.இந்துஜன் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும், சென்.ஜோன்ஸ் அணியின் அன்ரன் சரண் சிறந்த பந்துவீச்சாளராகவும், சென்.ஜோன்ஸ் அணியின் கமலபாலன் சபேசன் சிறந்த களத்தடுப்பாளராகவும், அதே அணியின் தெய்வேந்திரம் டினோசன் சிறந்த சகலதுறை ஆட்டக்காரராகவும், அதே அணியின் சிவராஜா பிரணவன் சிறந்த விக்கெட் காப்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.