(க.கிஷாந்தன்)
மலையகத்துக்கான பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான நிதி அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் – என்று உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அத்துடன், ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியும் தரமுயர்த்தப்பட்டு, அடுத்தாண்டு முதல் பட்டம் வழங்கப்படும் எனவும் கூறினார்.
மலையக பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தை தெரிவுசெய்வதற்காக ஹட்டனுக்கு இன்று (09.03.2020) கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன,தனது பணிகளை முடித்துக்கொண்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இந்த கண்காணிப்பு விஜயத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், உறுப்பினர் கணபதி கனகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வியை தொடரக்கூடிய வகையில் பல்கலைக்கழகமொன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்திருந்தார்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையின் பிரகாரம் வழங்கப்பட்ட அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தை பார்வையிடுவதற்காகவே இன்று கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டேன். இதன்படி கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம், பல்கலைக்கழக கல்லூரியாக தரமுயர்த்தப்படும்.
அதேபோல் கொட்டகலையில் சர்வ வசதிகளையும் கொண்ட பல்கலைக்கழகமொன்றும் அமைக்கப்படும். அமைச்சரவை அனுமதி பெற்றப்பட்டு, அடுத்தாண்டுக்கான பாதீட்டில் நிதி ஒதுக்கப்படும்.
பொயிறியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் உட்பட முக்கிய விடயங்களை அங்கு கற்று, கண்டுபிடிப்பாளர்களாகவும், நிர்மாணிப்பாளர்களாகவும் மாறுவதற்கான வாய்ப்பு தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இதன்மூலம் கிடைத்துள்ளது. சுதந்திரத்துக்கு பின்னர் மலையக மக்களுக்கு கிடைக்கும் சிறப்பானதொரு வரப்பிரதாசம் இதுவாகும்.
நாட்டிலுள்ள கல்வியல் கல்லூரிகள் பல்கலைக்கழக தரத்துக்கு தரமுயர்த்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். இதன்படி ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியும் தரமுயர்த்தப்படும். அங்கு தற்போது டிப்ளோமாவே வழங்கப்படுகின்றது.
அடுத்தாண்டு முதல் கல்வி தவணைக்காலம் ஓராண்டு அதிகரிக்கப்பட்டு, பட்டம் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” அத்தோடு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி படி தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் – என்றார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், ” அமைச்சர் கூறியதுபோல் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி கட்டங்கட்டமாக நடவடிக்கை எடுப்பார். கடந்த மூன்று மாதங்களுக்குள் பல நிறைய விடயங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐந்தாண்டுகளில் அவர்கள் செய்யாத விடயங்கள்கூட செய்யப்பட்டுள்ளன.” – என்றார். #வரவுசெலவுத்திட்டம் #மலையகம் #பல்கலைக்கழகம் #நிதி #பந்துல