தென் கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்த மற்றுமொரு குழுவினர் கொரோனா தடுப்பு முகாம்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு குறித்த நாடுகளில் இருந்து இலங்கை சென்ற சுமார் 300 இலங்கையர்கள் இன்று (11) காலை மட்டக்களப்பு மற்றும் கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாம்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து நேற்றுக் (10) இலங்கை சென்ற 181 பேர் கொண்ட முதலாவது குழுவினர் கொரோனா வைரஸ் தடுப்பு முகமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக் கழகத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் 179 இலங்கையர்கள் மற்றும் 2 தென்கொரிய நாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து செல்பவர்கள் இவ்வாறு கொரோனா வைரஸ் தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
உலக ரீதியில் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பாக இலங்கையில் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
வெளிநாடுகளில் இருந்து செல்பவர்களை தடுப்பு மையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனையின் பின்னர் அவர்களது வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.