யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலையத்தில் எந்த ஒரு நபரும் சித்திரவதைக்கு உள்படுத்தப்படவில்லை என அதன் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
“நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த ஒரு சந்தேக நபர் நேற்றையதினம் யாழ்ப்பாண காவல் நிலைய குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். எனினும் அவர் இத்தனை நாளாக காவற்துறையினரால் கைது செய்ய முடியாதவாறு தலைமறைவாகியிருந்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர் என்ற அடிப்படையில் அவர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டிருந்தார்.
சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தோம். மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியது எமது கட்டாயமாகும். அதைத்தான் செய்தோமே தவிர, நாம் எவரையும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சந்தேக நபர் ஒருவர் சித்திரவதைக்கு உள்படுத்துவதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்கு நேற்று மாலை 5.30 மணியளவில் அங்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர், சந்தேக நபர் கடுமையாகத் தாக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் மீட்டெடுத்தார்.
சந்தேக நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இரண்டு காவற்துறையினர் பாதுகாப்பு வழங்கியிருந்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொய்யான வழக்கைத் தாக்கல் செய்தமை தொடர்பில் மன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் காவற்துறையினர் நேற்று நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் தலைமையக காவற்துறைப் பொறுப்பதிகாரி சித்திரவதைச் செய்தியை மறுத்துள்ளார்.–