வெளி நாட்டிலிருந்து வரும் பயணிகளின் கொரேனா வைரஸ் தடுப்பு மையமாக வவுனியா-மன்னார் வீதியில் உள்ள பம்பைமடு பெண்கள் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டிற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து விதமான செயற்பாட்டு நிலையங்களையும் வடக்கு கிழக்கு தமிழர் நிலங்களில் இருந்து அகற்றி சிங்களப்பிரதேசத்தில் அமைத்துக் கொள்ளுமாறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-இவ்விடையம் தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சிவமோகன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
நடந்து முடிந்த யுத்தத்தின் மூலம் இலட்சக்கணக்கான உயிர்களையும், சொத்துக்களையும் பரிகொடுத்த மக்கள் தங்களுடைய சுய முயற்சியால் மீட்சி பெற்று வருகிறார்கள்.
அதை பொறுத்துக் கொள்ள முடியாத சிங்கள அரசு தமிழ் மக்களை நோயாளிகளாக்கி மீண்டும் ஒரு இன அழிப்பை செய்வதற்கு முயற்சிக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.
கொரோனா நோயாளர்களை தங்கவைப்பதற்கு அல்லது வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தடுத்து வைத்து பரிசோதனை செய்வதற்கு தென் பகுதியில் இடங்கள் இல்லையா? வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசம் மட்டும்தான் உங்கள் கண்களுக்கு தெரிகிறதா?
இவ்வாறு தான் கடந்த வருடம் கொழும்பு குண்டு வெடிப்புகளின் பின் இலங்கையில் இருந்த பாகிஸ்தானியர்களை வடக்கில் தங்க வைப்பதற்கான நடவடிக்கையினை அரசு மேற்கொண்டிருந்தது.
மேலும் மேலும் தமிழர்களை அழித்தொழிக்கும் சிந்தனைகளை அரசு கைவிட வேண்டும. எவ்வளவு வறுமையில் வாழ்ந்தாலும் தமிழ் மக்கள் தூய்மையில் சிறந்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.
கலாச்சார சீர் கேடுகளுடன் நோய் கிருமிகளை காவிக் கொண்டு வரும் வெளி நாட்டவரை தமிழர் தாயகப்பகுதிகளில் தங்க வைக்கும் நடவடிக்கையை அரசு உடனடியாக கைவிடுவதுடன் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதியில் அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தி அவர்களின் அனுமதியினை பெற வேண்டும். என அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.