இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா இரத்து செய்யப்பட்டுள்ளது.
கொவிட்19 வைரஸ் அச்சத்தினை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களை சனிக்கிழமை( 14) ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இத்தீர்மானத்திற்கு இணங்க இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினையும் இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆதலால் எதிர்வரும் மார்ச் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா இரத்துச் செய்யப்படுகின்றது என்பதனை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.
ஏற்கனவே பல்கலைக்கழக நிர்வாகம் மார்ச் 16 ஆம் திகதி முதல் பட்டமளிப்பு ஆரம்பமாக உள்ளதாக அறிவித்திருந்ததுடன் பிரயோக விஞ்ஞானங்கள் மற்றும் கலை கலாசார பீட பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறும் என அறிவித்திருந்தது.
இந்த பட்டமளிப்பு அமர்வில் பிரதான உரையினை ஆற்றுவதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கௌரவ ஏ.எச்.எம். திலீப் நவாஸ் அழைக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் பிற்பகல் பொறியியல் பீடம், இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீட பட்டதாரிகளுக்கும் பட்டமளிக்கப்படவுள்ளது. இவ்வமர்வில் றுகுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் விவசாய ஆய்வுக் கொள்கைக்கான இலங்கைக் கவுன்சிலின் பிரதானியுமான சிரேஷ்ட பேராசிரியர் காமினி சேனாநாயக்க பிரதான உரையினை நிகழ்த்த விருந்தார்.
இரண்டாம் நாள் அமர்வாக மார்ச் 17 ஆம் திகதிஇ முகாமைத்துவ வர்த்தக பீடத்திற்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறும். இவ்வமர்வில் களனிப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைமைப் பேராசிரியரும் மனிதப்பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானங்களுக்கான உயர் கற்கைகள் தேசிய நிலையத்தின் பணிப்பாளருமான சிரேஷ்ட பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி பிரதான உரையினை ஆற்றவுள்ளார். அன்றைய தினம் பிற்பகல் 12.30 மணியுடன் இந்நிகழ்வு உத்தியோகபூர்வமாக முடிவடைய இருந்தது.
இந்நிகழ்வில் மேற்படி ஐந்து பீடங்களினதும் 988 உள்வாரிப் பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளதுடன் 22 பேர் வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தினையும் 03 பேர் முதுகலைமாணி பட்டத்தினையும் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் எம்.ஏ. கரீம் மற்றும் அதே பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. எம்.ஐ.எம். அமீன் ஆகியோர் கௌரவ கலாநிதிப் பட்டங்களைப் பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இவ் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 16ம், 17ம் ஆகிய இரு தினங்களாக பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன் இதில் மூன்று கடடங்களாக இடம்பெறவுள்ளதுடன் 1013 பேர் பட்டம் பெற இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்விழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் பல்கலைக்கழக நிர்வாகம் மிகுந்த அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்