மனித வாழ்க்கையில் தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மிகவும் வலுவான விடயமாக ‘புனிதம்’ தொழிற்பட்டு வருகின்றது. பொதுமக்கள் வாழ்வில் மிகவும் ஆழமாகப் பரவலாக்கம் பெற்றிருக்கும் ‘புனிதம’; என்ற எண்ணக்கரு மிகவும் சாதகமானதாகவும் நன்மை பயப்பதாகவுமே மக்கள் மனங்களில் பதிய வைக்கப்பட்டிருக்கின்றது. இதன் உள்ளர்த்தமான கட்டுப்படுத்தும், ஆதிக்கம் செலுத்தும் அம்சங்களை வெளிப்படுத்துவது என்பது கூரிய சிந்தனையாலும் அது சார்ந்த உரையாடல்களாலும், கல்லில் நாருரிப்பது போலான செயலாகவே காண முடிகிறது.
ஆதிக்கங்களை விரும்பியேற்க வைக்கும் பல்வகைக் காலனியக் கூறுகளில் ‘புனிதம்’; என்ற எண்ணக்கரு விரும்பி ஏற்றுக் கொள்ளும் உயிர்க்கொல்லி வைரசுத் தாக்கங்களில் மிகுந்த வலிமை கொண்டதனை அறிய வைக்கும் அறிவு காலத்தின் அவசியத் தேவையாகும். போராக வடிவெடுத்து உயிர்கொல்லும் வாழ்வியலை ‘புனிதம்’ படைத்தும், காத்தும் வருவது தினசரி செய்தியாக வாசிக்கவும், அன்றாட வாழ்வில் அனுபவிக்கவும் முடிகிறது. இவற்றுக்கான நிலைக்களங்களாகக் கட்டமைக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட வரலாறுகளும், இலக்கியங்களும்; இவற்றைப் பயின்று கொடுக்கும் மத வழிபாட்டுத்தலங்களும், கல்விச் சாலைகளும், வெகுசன ஊடகங்களும் திகழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவற்றைக் கேள்விக்குட்படுத்தும் விடயங்கள் மிகப் பெரும்பாலும் புறமொதுக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றமையை தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் காண முடிகின்றது. எதிர்ப்புக்குரல்கள், கலகக் குரல்கள், புரட்சிக் குரல்கள் எல்லாம் பேசாப் பொருளாக ஆக்கப்பட்ட அல்லது புனிதப்படுத்தப்பட்ட நிலைமையிலேயே நிலவிவருகின்றமையை காண முடிகிறது. அல்லது அறிய முடிகிறது. ‘இவை இவ்வாறுதான் இருந்தன’ என்ற வகையிலான உறுதிப்படுத்தலுடனேயே திரிபுப்படுத்தப்பட்ட விடயங்கள் உண்மையானது எனவும், மூலமானதெனவும் மக்கள் மீது பதிய வைக்கப்படுகிறது.
இந்தப் பின்னணியில் வானதி பகீரதனின் ‘காரைக்காலம்மையாரின் வரலாற்றுப்புனைவும் பணிகளும்’ என்ற நூல் ஆதிக்க நோக்கிலான கட்டமைப்புக்கள் மீதான கேள்விக் குரல்களையும், அதற்கான கருத்துநிலைகளையும் உரையாடலுக்குக் கொண்டு வருவதாக இருக்கிறது. புனிதவதி என்ற பெண் காரைக்காலம்மையார் ஆக்கப்பட்டு பாடநூல்களிலும், சமய நூல்களிலும் எமக்குத் தரப்பட்டிருப்பவை, அவர் வாழ்ந்த காலத்தில் விரும்பி அவரெடுத்துக் கொண்டதாகக் கூறப்படும் பேய்க்கோலத்திலும் மிகவும் மோசமானதாகவே இருப்பது உரையாடலுக்குக் கொண்டு வரப்படுகிறது.
ஏன் இதைச் செய்கிறார்கள்? யார் இதைச் செய்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கு விடை கூறுவது, நீதி, நியாயமான சமூகங்களது உருவாக்கங்களுக்கான வாழ்வியல் பயணத்தில் அடிப்படையானது. இதற்கான அறிமுக வாசிப்பைத் தருவதாக இந்நூல் அமைந்திருப்பது கவனத்திற்குரியது.
சமூகத்தில் இயல்பான பெண்ணாக வாழ்ந்துகொண்டு, நியாயமற்ற குடும்ப மற்றும் சமூக நிலைமைகளைக் கேள்விக்குட்படுத்தும் ஆளுமைகளின் புலமைத்துவம், துணிவு, நீதி, நியாய நோக்குடனான யதார்த்த வாழ்க்கை என்பன மறைக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்டு இயல்பு நீக்கம் பெற்றவர்களாக அறியவைக்கப்படுவதன் வாயிலாக எத்தகைய சமூகநிலை உருவாக்கப்பட்டு, காக்கப்பட்டு வருகிறது என்பது வெளிப்படை.
அத்தகையதொரு சிதைப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஆளுமைகளுள் ஒருவர் தான் காரைக்காலம்மையார் அல்லது காரைக்காற்பேயார் என அழைக்கப்படும் புனிதவதி என்னும் பெண் ஆளுமை. வன்முறையற்றதான புனிதவதியின் சிந்தனைகள் மனிதம் என்பதன் அர்த்தத்தை, நியாயத்தைத் துலக்க வைப்பன. அவருடைய புலமைத்துவ நோக்கும், திறமும் அறியத்தரப்படுவதற்கு மாறாகப் பக்திப் பேயாராக அறிய வைத்திருப்பதன் அரசியல் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. இந்தப் புரிதல் தமிழர்தம் பண்பாட்டுள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் வன்முறைக் கூறுகளை இனங்கண்டு அகற்றுவதற்கு மிகவும் அவசியமானது.
அறிவு, ஆளுமை, ஆற்றலுடன் குரல் கொடுக்கும் வல்லபம் கொண்ட இளம் பெண்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவதூறுகளால் அழித்தொழிக்க முனையும் சமகாலப் பண்பாட்டுச் சிறப்பியல்பின் வேர்கள் மிகவும் நீளமானவை. இரண்டாயிரம் வருட வரலாறு கொண்டவை. எனவே பண்பாட்டு மரபுகளாகக் கொண்டாடப்பட்டு வரும் பிறழ்வுகள் மீதான கேள்விகளும் அவற்றின் நீக்கங்களுமற்ற விடுதலை பற்றிய உரையாடல்களும், செயற்பாடுகளும் ஆதிக்க நிலைப்படுத்தல்களுக்கான கூவல்களே அன்றி வேறொன்றில்லை.
இத்தகையதொரு பின்னணியில் வானதி பகீரதனின் நூல் புனிதவதி என்னும் பெண்ணாளுமை, காரைக்காலம்மையார் என்றும், காரைக்கால் பேயார் என்றும் உருவச்சிதைப்பே திருவுரு என்னும் வகையிலான பண்பாட்டுக் கட்டமைப்பு மீதான வெடிப்புக்களை ஏற்படுத்தும் வகையிலான மெய்யான புலமைச் சான்றாக அமைந்திருக்கிறது.
கலாநிதி. சி. ஜெயசங்கர்.