இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள் பெண்கள்

இனியொரு விதிசெய்வோம்..

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு சில நாட்களிலேயே குறிப்பிட்ட சில பெண் வேட்பாளர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள பால்நிலை சார்ந்த விமர்சனங்களையும் வன்முறையையும் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு உன்னிப்பாகக் கவனித்து வருவதுடன் இதனை மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பதன் மூலகாரணிகள் பெண்கள் மீதும் அவர்களது தோற்றம், நடத்தை, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் மற்றும் அவர்களது குடும்பம் சார்ந்தும் நடத்தப்படும் தாக்குதல்களாகும். மேலும் இந்நாட்டில் நடந்த தொடர்ச்சியான போர் மற்றும் ஏனைய வன்முறைகளால் மிகவும் பாதிக்கப்பட்டு இன்னுமே தீர்வு கிடைக்காத பட்சத்தில், தீர்வுகளை எதிர்பார்த்து தொடர்ந்து காத்திருக்கும் பெண்களைப் பிரிதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் அரசியல்வாதிகள் இன்னும் எதுவும் செய்யாத நிலை நாம் அறிந்ததே. இந்நிலையில் தமக்கு சமூகம் விதித்துள்ள கட்டுக்களைத் தாண்டி அரசியலில் பெண்களே பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பது பெண்களாகிய எங்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

எப்போதெல்லாம் பெண்கள் இச்சமூகக் கட்டுக்களைத் தாண்டி, தமக்கு ஏற்படப்போகும் சவால்களுக்கெல்லாம் முகம் கொடுக்கத் துணிந்து அரசியலில் இறங்குகின்றார்களோ அப்போதெல்லாம் எமது சமூகமும், குறிப்பாக ஆண்களும் ஊடகங்களும், சமூக வலைத் தளங்களும் அவர்களைப் பற்றிய உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பேசுவதும் அவர்களை ஒரு போகப் பொருளாக்கி அவமானப்படுத்துவதும் எதிர்காலத்தில் பெண்கள் அரசியலில் ஈடுபடவே முடியாது என்பது போன்றதான ஒரு நிலையைத் தோற்றுவிப்பதை அவதானிக்க முடிகிறது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ்க் கட்சிகள் பெண்களைத் தேர்தலில் நிறுத்தியிருப்பது பெண்கள் சார்ந்த தமிழ் அரசியற் பரப்பில் மிக முக்கியமான மாற்றமொன்றாக நாம் கருதினாலும் பெண்களை வரவேற்கக்கூடிய மனநிலையும், அவர்களை மரியாதையுடன் நடாத்தும் அரசியல் கலாசாரமும் தமிழ்பேசும் மக்களின் அரசியல் மனோநிலையில் மாற்றம் ஏற்படாதிருப்பதையே காட்டுகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாகவும், காணாமற் போனோரைத் தேடும் பெண்கள் தொடர்பாகவும் பொதுவான பெண்கள் உரிமைகள் பற்றி அக்கறைப்படுவதாய் காட்டிகொள்ளும் ஆண்களும் கூட, தேர்தலில் நிற்கும் பெண்கள் மீது இப்போது முடக்கி விடப்பட்டுள்ள வன்முறைகள் குறித்து மௌனம் காப்பதும் இன்னும் சில சந்தர்ப்பங்களில் இவ்வன்முறைகளில் பங்கெடுப்பது மிகவும் முரணாகவுமுள்ளது. சில பெண்களின் சுயமரியாதையைக் கேள்விகுட்படுத்துவதாக எண்ணிக்கொண்டு ஒட்டுமொத்தப் பெண்களpன் சுயகௌரவத்தினையும் பாதிப்புக்குட்படுத்துவது மிகவும் வருத்தத்திற்குரியது. இப்போதுவரை மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் அதிகளவிலான ஆண்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஆண் அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் பாலியல் துஷ்பிரயோகங்கள், கையாடல்கள், சட்டவிரோத சொத்துக் குவிப்பு, கொள்கைப் பிறழ்வுகள் குறித்து எதுவும் பேசத் தலைப்படாத சமூகம் பெண்களின் பால்நிலை நடத்தை சார்ந்து மட்டும் அவர்களை விமர்சிப்பது நகைப்புக்குரியது. பெரும்பான்மை சமூகத்தில் இல்லாத அளவுக்குத் தமிழ் சமூகத்தில் இம்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரசியலிலுள்ள பெண்களுக்கெதிரான வன்முறை, சிறுபான்மையின முஸ்லிம் பெண்கள் இன்னுமே தேசியத் தேர்தலில் களத்தில் இறங்கத் தயக்கமான தன்மையை மேலும் ஏற்படுத்தியுள்ளதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.

இச்சூழ்நிலை ஒரு வகையில் மீண்டும் அரசியல் இலாபத்துக்காகப் பெண்கள் பகடைக் காய்களாக்கப்படுகிறார்களோ என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கிறது. உள்ளூராட்சித் தேர்தலில் 25% ஒதுக்கீடு மூலம் உள்ளூராட்சி சபைகளில் அங்கத்தவர்களாக உள்ள பெண்கள் சபைகளில் பேச அனுமதி மறுக்கப்பட்டும், தரக்குறைவாக நடத்தப்பட்டும் வெறும் அங்கத்தவர்களாகவும் மட்டுமே சபைகளில் அமர்த்தப்பட்டிருப்பது தொடர்பில் நாம் இன்னும் தொடர்ச்சியான முறைப்பாடுகளைக் கேட்ட வண்ணமே இருக்கின்றோம் . இது இவ்வாறிருக்க மிக முக்கியமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் பாராளுமன்றுக்கான தேர்தலிலும் ஆளுமை மிக்க திறமையான பெண்கள் போட்டியிட முடியாமல் அவர்களுக்கு விதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தடைகள் பாரதூரமானவை. இவை எல்லாம் ஒருவகையில் மிக ஆளுமை உடைய சமூகத்தில் பல ஆண்டுகள் மக்களுடன் ஒன்றி வேலைசெய்த மக்களைத் தாழ்மைப்படுத்தும் கட்டமைப்புகளைத் துணிச்சலுடன் கேள்வி கேட்கும் பெண்கள் அரசியலில் வந்துவிட்டால் எங்கே தங்களது அதிகாரம் கைவிட்டுப்போய்விடுமோஎன்ற ஆண்களின் தாழ்வுமனப்பான்மையின்  வெளிப்பாடோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதையும் தவிர்க்க முடியாதுள்ளது. மேலும் தற்போது அரசியலில் ஈடுபடவுள்ள ஆளுமைமிக்க பெண்கள் களத்தில் ஆற்றியுள்ள சேவைகள் மிகமுக்கியமானவையும் பாராட்டுக்குரியவையுமாகும். இருப்பினும் அவர்களின் சேவைகள் சார்ந்து ஆராயமல் விமர்சிப்பது கண்டனத்திற்குரியதாகும்.

சமூக வலைதளங்களில் போலியான பெயர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு பெண்கள் மீது அவதூறுகள் பரப்புவோர் மீதும் உண்மைகளுக்குப் புறம்பான செய்திகளை எந்த ஆதாரமுமின்றிப் பதிவுசெய்வோர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கான கட்டமைப்புகள் மிக விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கிறோம். பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான பாதுகாப்பானதொரு சமூகத்தையும் அரசியற் கலாசாரத்தையும்  கட்டியெழுப்புவதற்கான பணியில் ஈடுபடச் சமூகசேவை நிறுவனங்கள், அரசுசார், அரசுசாரா அமைப்புக்கள், பல்கலைக்கழகங்கள், சமூகத்தில் உயர் பதவியில் உள்ளோர், இளையோர், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைவரிடமும் கோரிக்கை விடுக்கிறோம். பெண்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் பெண்கள் மட்டுமே பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் கலாசாரம் மாறவேண்டும் என்பதையும் சமூகப் பிரக்ஞையுடைய எவரும் வேகமாக வளரும் நச்சுத்தன்மைமிக்க இத்தனிமனிதத் தாக்குதல் காலாசாரத்திற்கெதிராகக் குரல்கொடுக்க விரைவில் முன்வரவேண்டும் என்பதையும் இங்கே காத்திரமாகப் பதிவுசெய்ய விரும்புகின்றோம்.

 

பெண்களின் செயற்பாட்டிற்கான வலையமைப்பு என்பது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 9 மாவட்டங்களைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் 9 பெண்கள் குழுக்களின் கூட்டாகும்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.