ஆலயங்களில் பெருமளவில் திரண்டு வழிபடுவதை தவிர்த்து வீடுகளில் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்வதன் மூலம் கொரோனாவின் பிடியில் இருந்து பாதுகாப்பு பெறுவதுடன் அது பரவுவதையும் கட்டுப்படுத்த உதவுங்கள் என சைவ மக்களிடம் ஆதீன குரு முதல்வர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா தாக்கம் குறித்து நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தென்கயிலை ஆதீன முதல்வர் சிவத்திரு அகத்தியர் அடிகளார், மெய்கண்டார் ஆதீன முதல்வர் தவத்திரு உமாபதி சிவம் அடிகளார் ஆகியோர் இணைந்து மேற்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்ததாவது;
இன்று உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா அபாயத்திற்கு எமது நாடும் உட்பட்டுள்ளது. இதற்கான தடுப்பு நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு சைவ மக்களையும் ஆலயங்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
ஆலய திருவிழாக்களை இயன்றளவு எளிமையாக மக்கள் நெரிசல் இல்லாமல் நிகழ்த்த ஏற்பாடு செய்யுங்கள். விசேட நிகழ்வுகளை தவிர்ப்பதுடன் அன்னதானம் வழங்குவதையும் தவிர்த்து கொள்ளுங்கள்.
புலம்பெயர் தேசங்களில் இருந்து இரு வாரங்களுக்குள் நாட்டிற்கு திரும்பியவர்கள் ஆலயங்களிற்கு செல்வதை முற்றாக தவிர்த்து கொள்ளுங்கள். இந்த கொடிய நோயிலிருந்து உலக மக்களை காப்பாற்ற இறைவனை மனமுருகி பிரார்த்திப்போம். – என தெரிவித்துள்ளனர். #அன்னதானம் #குருமுதல்வர்கள் #கொரோனா #திருவிழா #புலம்பெயர் #வேண்டுகோள்