கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை பரிசோதிக்கும் பணியை அமெரிக்கா இன்று ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 6000-ஐ தாண்டி உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பல்வேறு நாடுகளின் மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். வல்லரசு நாடான அமெரிக்காவும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இன்று திங்கட்கிழமை அமெரிக்கா பரிசோதித்து பார்க்க உள்ளதாக அமெரிக்காவின் சிரேஸ்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பரிசோதனை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
சியாட்டில் உள்ள கைசர் பெர்மனண்டே வோஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற இருக்கும் இந்த சோதனைக்கு தேசிய சுகாதார நிறுவவனம் நிதியுதவி செய்துள்ளதாகவும் அந்த சுகாதார அதிகாரி குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை முழுமையாக சோதனை செய்து சரிபார்க்க ஒரு வருடம் முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #கொரோனா #தடுப்புமருந்து #அமெரிக்கா #நிபுணர்கள்