வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) இன்று (18) காலை விசேட உரை நிகழ்த்தியுள்ளார். இதன்போது முதலாம் உலகப்போரின் பின்னர் இவ்வாறானதொரு தேசிய அவசரநிலையை அவுஸ்திரேலியா சந்தித்ததில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் மக்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்ட பிரதமர், பயணம் மற்றும் ஒன்றுகூடுதல் தொடர்பிலான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளார். நூற்றுக்கும் அதிகமானவர்கள் ஒன்றுகூடக்கூடிய அவசியமற்ற ஒன்றுகூடல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வௌிநாடுகளுக்குப் பயணிக்க வேண்டாமென அவுஸ்திரேலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வௌிநாடுகளிலிருந்து திரும்பும் அவுஸ்திரேலியர்களாலேயே பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு திரும்பும் பிரஜைகள் தம்மைச் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென அவுஸ்திரேலியா கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது.
இருப்பினும் பாடசாலைகளை மூடுவது தொடர்பில் பிரதமர் அறிவிப்பு எதனையும் வௌியிடவில்லை. இதேவேளை அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 450 இற்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 5 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #அவுஸ்திரேலியா #ஒன்றுகூடல் #தடை #கொரோனா