உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி தற்போது வரை கொரோனாவால் 7529 பேர் பலியாகி உள்ளனர். 184, 976 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
வட கொரியாவில் மருத்துவமனை கட்டுவதற்காக பணிகளைத் தொடங்கி வைத்தார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் .
அந்நாட்டுத் தலைநகர் பியோங்யாங்கில் கட்டப்பட இருக்கும் மருத்துவமனைக்கு அஸ்திவாரம் போடும் பணியில் ஈடுபட்டு,பணிகளை அவர் தொடங்கி வைத்தார் என்கிறது அந்நாட்டுத் தேசிய ஊடகம்.
ஆனால் அதே சமயம் உலகெங்கும் பரவி உள்ள கொரோனாவுக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாக அதில் குறிப்பிடப்படவில்லை.
வட கொரியாவை ஆளும் உழைப்பாளர் கட்சி தொடங்கப்பட்டு வரும் அக்டோபருடன் 75 ஆண்டுகள் ஆகின்றன. அதனால், அக்டோபருக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என கிம் உத்தரவிட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
வட கொரியாவில் கொரோனா தொற்று இல்லை என அந்நாடு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், அதே நேரம் கொரோனா வராமல் தடுக்க விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
கொரோனா வட கொரியாவில் பரவும் பட்சத்தில் அதன் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். அந்நாட்டின் மிக மோசமான சுகாதார கட்டமைப்பினால் கொரோனாவை கையாள முடியாது.
ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை கொரோனாவால் ஏற்படும் பாதிப்பிலிருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க ஒதுக்கி உள்ளார்.
இந்த நிதியானது அமெரிக்கர்கள் அனைவருக்கும் பிரித்து அளிக்கப்படும்.
அமெரிக்கா நிதித்துறை செயலாளர்ஸ்டீவின், இதில் 250 பில்லியன் டாலர்கள் நிதியைப் பிரித்து காசோலைகளாக அனுப்ப இருப்பதாகக் கூறி உள்ளார்.
ஒரு ட்ரில்லியன் நிதி என்பது பிரிட்டனின் மொத்த பட்ஜெட்க்கு சமமானது.
மக்களுக்கு வழங்கிய 250 பில்லியன் டாலர்கள் போக மீதி தொகை வானூர்தி நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு வழங்கப்படும்.
வணிக கடனாக 330 பில்லியன் பவுண்டுகளை அளிக்கத் திட்டமிட்டுள்ளது பிரிட்டன்.
மீளும் பங்கு சந்தை
ஆசிய பங்கு சந்தை மெல்ல மீண்டு வருகிறது. உலக நாடுகள் கொரோனாவை எதிர்கொள்ள நிதி ஒதுக்கியதை அடுத்து ஆசிய பங்கு சந்தைகள் மெல்ல மீண்டு வருகின்றன.
முகமூடி அணியாமல் வரும் மக்களை பொது போக்குவரத்தில் அனுமதிக்கக் கூடாது என ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரியல் பேராசிரியர் கோரி உள்ளார்.
50 மாகாணங்களிலும் கொரோனா
அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது செவ்வாயன்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து தற்போது அமெரிக்காவில் உள்ள மொத்தம் 50 மாகாணங்களிலும் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது.
நியூயார்க் நகரம் முழுவதும் முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் 6000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 105 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
உலகளவில் மொத்தம் 2 லட்சம் மக்கள் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 8000 பேர் இறந்துள்ளனர்.
மாகாணங்களின் ஆளுநர்கள் கேட்டுக்கொண்டால், கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் புதிய கள மருத்துவமனைகள் அமைக்க ராணுவம் அனுப்பப்படும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “வேண்டுமானால் தேசத்தையே முடக்கலாம். ஆனால், அது தேவைப்படாது என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.
எல்லைகளை மூடும் ஐரோப்பிய ஒன்றியம்
கொரானா வைரஸ் தொற்று பரவுதல் காரணமாக வெளிநாட்டவர்கள் நுழைய 30 நாள் தடையை விதித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 26 நாடுகளோடு, ஐஸ்லாந்து, லெச்டென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இது பொருந்தும்.
இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தொடர்ந்து அதிகரித்த உயிரிழப்புகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரானா வைரஸால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது ஐரோப்பா. உலகளவில் 7,500 ஐரோப்பியர்கள் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
கொரோனா – சில முக்கிய நிகழ்வுகள்
- கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸ் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் மக்கள் யாரேனும் வெளியே சென்றால், அவர்கள் எதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார்கள் என்ற காரணத்தோடு ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரான்ஸில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,730ஆக உயர்ந்துள்ளது. 175 பேர் இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 7 சதவீதம் பேர் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
- பிரிட்டனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளது.
- ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000-ல் இருந்து 11,178 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியை அடுத்து இந்த வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடு ஸ்பெயின்.
- சீனாவை அடுத்து அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது இத்தாலியில்தான். அங்கு 31,500 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 2,150ஆக இருந்த பலி எண்ணிக்கை செவ்வாயன்று 2,503ஆக உயர்ந்தது. இத்தாலி நாடு முழுவதும் இதனால் முடக்கப்பட்டுள்ளது.
- சீனா, இத்தாலியை தொடர்ந்து மூன்றாவதாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இரான். 16,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 988 பேர் இறந்துள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள தரவுகளைவிட பலியானோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- இரானில் கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்த அரசியல் கைதிகள் உள்பட 85,000 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
- உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவரும் நிலையில், செவ்வாயன்று சீனாவில் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே புதிதாக கொரோனா பரவியிருக்கிறது தெரிய வந்துள்ளது.
- பிலிபைன்ஸ நாடு அதன் பங்குச்சந்தையை காலவரையின்றி மூடியுள்ளது.
- Thanks – BBC