கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மார்ச் 24 செவ்வாய் காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அதாவது 24 செவ்வாய் பிற்பகல் 2.00 மணிக்கு அம்மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மார்ச் 23 திங்கள் காலை 6.00 மணிக்கு நீக்கப்படுவதுடன், மீண்டும் அதே தினம் பிற்பகல் 2.00 மணி முதல் அமுல்படுத்தப்படும். இம்மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் 24 செவ்வாய் காலை 6.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் நாடு முழுவதிலும் உள்ள மதுபான சாலைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாவட்டங்களில் விவசாய சமூகத்திற்கு தங்களது பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்கு இடமளிக்குமாறு அரசாங்கம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் போதுமானளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதால் தேவையற்ற வகையில் பொருட்களை சேர்ப்பதில் குழப்பமடைய தேவையில்லை என அரசாங்கம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே அத்தியாவசிய உணவுப்பொருட்களை தடையின்றி தேவையான இடங்களுக்கு கொண்டுசெல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.