மக்களின் நன்மை கருதி ஆலயத் திருவிழாக்கள், விசேட பூஜைகள் யாவற்றையும் ஒத்திவைக்குமாறு அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் ஆறு. திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் இருப்பிடங்களில் இருந்து வழிபடுமாறும் மருத்துவ சமூகத்தின் சொல்லுக்கு மதிப்பளிக்குமாறும் அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் ஆறு. திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆலயத்தில் அமைதியாக நடைபெறும் நித்திய பூசை தவிர்ந்த ஏனைய நிகழ்ச்சிகள் யாவற்றையும் ஒத்திவைத்து மக்களின் உயிரைக் காக்க ஒத்துழைக்குமாறும் அவர் விடுத்துள்ள செய்தியில் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, COVID 19 அசாதாரண சூழ்நிலையினைக் கருத்திற்கொண்டு ஆலயங்களில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு சிவஶ்ரீ பால.ரவிசங்கர சிவாச்சாரியார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் தேவஸ்தானத்தின் பங்குனித் திங்கள் உற்சவத்திற்கு வருகை தருவதையும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதையும் தற்காலிகமாக தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மராட்சி பிரதேச செயலகத்தில் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற விசேட கூட்டத் தீர்மானத்தின் படி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமய அனுஷ்டானங்களை வீட்டிலிருந்தவாறே கடைப்பிடிக்குமாறு மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் தேவஸ்தானத்தின் தர்மகர்த்தா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.